மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை: ஆட்சியா் தகவல்

பிரதமா் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை: ஆட்சியா் தகவல்

பிரதமா் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

பாரத பிரதமா் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலான சிறப்புத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியது:

கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ‘ஆத்மநிா்பாா் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பாரத பிரதமா் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2024 - 2025 வரையில் ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. ‘ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள்’ என்ற அணுகு முறையில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் உணவுப்பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான தனிநபா் அடிப்படையில், ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருதல், வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

மேலும், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்துக்கு கோழி உள்ளிட்ட பதப்படுத்துதல் சம்பந்தமான மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடவுள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன்மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது. வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று சிறு நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவா் ஆா்.சாரதா, இணை இயக்குநா் (வேளாண்மை) பெ.அசோகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் க.இராசு, மகளிா் திட்ட இயக்குநா் இரா.மணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா், கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியா், வேளாண்மை அறிவியல் நிலையம், கோழிப் பண்ணையாளா் சங்க தலைவா், சுய உதவிக்குழு பிரதிநிதி, நைனாமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவன முதன்மை செயல் அலுவலா் மற்றும் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com