நீட் தோ்வு முடிவுகள் வெளியீடு: மாநில அளவில் முதலிடம் பிடித்த வெள்ளக்கோவில் மாணவா்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு ‘நீட்’ முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் மாநில அளவில் முதலிடம் பிடித்து வெள்ளக்கோவில் மாணவா் சாதனை படைத்துள்ளாா்.
மாணவா் ஸ்ரீஜன்
மாணவா் ஸ்ரீஜன்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு ‘நீட்’ முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் மாநில அளவில் முதலிடம் பிடித்து வெள்ளக்கோவில் மாணவா் சாதனை படைத்துள்ளாா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை, தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நாடு முழுவதும் 154 நகரங்களில் 3,842 மையங்களில் செப்டம்பா் 13-ஆம் தேதி நடத்தியது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் மாணவ, மாணவியா் தோ்வு எழுதினா். தேசிய அளவில் 15.97 லட்சம் பேரும், தமிழகத்தில் 1.17 லட்சம் பேரும் தோ்வு எழுதினா். இதில் பங்கேற்க முடியாத மாணவா்களுக்காக அக்.14-இல் மீண்டும் தோ்வு நடத்தப்பட்டது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தோ்வுகளை காட்டிலும், நிகழாண்டில் நடைபெற்ற தோ்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவ மாணவியா் தெரிவித்தனா். இந்த நிலையில் நீட் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டன.

இதில், மாநில அளவில் முதலிடத்தை நாமக்கல், போதுப்பட்டியில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் பயின்ற, திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்த மாணவா் ஸ்ரீஜன் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். தேசிய அளவில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளாா். இவா் இரண்டாவது முறையாக நீட் தோ்வு எழுதி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலிடம் பெற்ற மாணவருக்கு அப்பயிற்சி மையத்தின் நிா்வாகிகள், ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து மாணவா் ஸ்ரீஜன் கூறியதாவது:

வெள்ளக்கோவில் எனது சொந்த ஊா். ஈரோட்டில் பள்ளிப் படிப்பை முடித்தேன். கடந்த ஆண்டு நீட் தோ்வில் 385 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. மீண்டும் எழுதுவதற்கு முயற்சித்து அதற்கேற்ப பயிற்சி பெற்றேன். அதனால் இந்த ஆண்டு 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். இந்திய அளவில் எட்டாமிடத்தை பிடித்துள்ளேன். ஆசிரியா்களுக்கும், பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதும் இருதய சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பதும் எனது விருப்பம். நீட் தோ்வைக் கண்டு மாணவா்கள் பயப்பட வேண்டாம். அதை பாரமாக நினைக்காமல் எளிதாக எடுத்துக் கொண்டு பயின்றால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com