நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிகட்டட கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததுஅமைச்சா் பி.தங்கமணி நேரில் ஆய்வு
By DIN | Published On : 31st October 2020 07:17 AM | Last Updated : 31st October 2020 07:17 AM | அ+அ அ- |

இடிந்து விழுந்த நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முகப்பு கான்கிரீட் தளம்.
நாமக்கல்லில் புதிதாகக் கட்டப்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முகப்பு கான்கிரீட் தளம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் 25 ஏக்கரில் ரூ. 336 கோடியில் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பேரவைத் தோ்தலுக்கு முன்னதாகவே செயல்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் கல்லூரியின் முகப்பு கான்கிரீட் தளம் இடிந்து விழுந்தது. அப்போது, தொழிலாளா்கள் யாரும் அங்கு இல்லாததால் அசம்பாவிதம் நிகழவில்லை.
தகவல் அறிந்து அங்கு சென்ற மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களிடம் விளக்கம் கேட்டறிந்தாா்.
இடிந்து விழுந்த முகப்பு கான்கிரீட் தளத்தை நேரில் ஆய்வு செய்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தாா். இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாதவாறு கவனமுடன் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மருத்துவக் கல்லூரி முகப்பு கான்கிரீட் தளத்தில் குறைபாடுகள் (சாரக் கம்பிகளில் வெல்டிங் சரிவர இல்லாதது) இருப்பதைக் கண்டறிந்த பொறியாளா்கள், அவற்றை முழுமையாக அகற்றிவிட்டு புதிதாக அமைக்க முடிவு செய்தனா். அதற்காகவே கான்கிரீட் தளம் இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொழிலாளா்கள் யாரும் பாதிக்கப்படவில்லை; இதில் மனிதத் தவறுகள் இல்லை.
பள்ளிபாளையம் பட்டாசு விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வா் நிவாரண நிதி வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு ஆட்சியரிடம் தெரிவித்துள்ளேன். மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. மின் கட்டணம் உயா்த்தப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை திறக்கப்படும் என்றாா்.