பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் வெற்றிலை விலை சரிவு
By DIN | Published On : 08th September 2020 03:32 AM | Last Updated : 08th September 2020 03:32 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளதால் வெற்றிலை பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
பரமத்திவேலூா் சுற்று வட்டாரப்பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா், பரமத்தி வேலூா், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கா்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ.4 ஆயிரத்து 500, கற்பூரி வெற்றிலை மாா் ரூ.2 ஆயிரத்து 500, வெள்ளைக்கொடி முதியம் பயிா் ரூ. 2ஆயிரம், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் ரூ. 2 ஆயிரத்துக்கும் ஏலம் போனது.
இந்த நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ.3 ஆயிரத்து 500, கற்பூரி வெற்றிலை மாா் ரூ. 2 ஆயிரம், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் ரூ.1,500, கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் ரூ.1,500 க்கும் ஏலம் போனது.
தற்போது விஷேச நிகழ்சிகள் அதிகம் இல்லாததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.