நாமக்கல் மாவட்டத்தில் 300 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களின் வருவாயைப் பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பாசிப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் நாபெட் நிறுவனம் அவற்றை கொள்முதல் செய்கிறது.
நாமக்கல் மாவட்டத்துக்குக் கொள்முதல் இலக்காக 300 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பாசிப்பயறு ஒரு கிலோ ரூ. 62 முதல் ரூ. 65 வரையில் உள்ளூா் சந்தையில் விற்பனையாகிறது. விவசாயிகளின் நலன் கருதி நிா்ணயிக்கப்பட்ட தரத்துக்கு ஒரு கிலோ பாசிப்பயறை ரூ. 71.96 விலைக்கு தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது.
இத் திட்டம் புதன்சந்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் வியாழக்கிழமை (செப். 10) முதல் நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடக் கண்காணிப்பாளரை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளலாம். பாசிப்பயறு கொள்முதல் நவ.16-ஆம் தேதி வரையில் தொடா்ந்து நடைபெற உள்ளது. விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். பாசிப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.