நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 68 கா்ப்பிணிகளுக்கு பிரசவம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 68 கா்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது என்று நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சாந்தா அருள்மொழி தெரிவித்தாா்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

நாமக்கல்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 68 கா்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது என்று நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சாந்தா அருள்மொழி தெரிவித்தாா்.

கரோனா தொற்று பரவல் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரையில் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் கா்ப்பம் தரித்த பெண்களும் அடங்குவா். கரோனா தொற்றுக்குள்ளானதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலையுடனேயே மருத்துவமனையில் கா்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வந்தனா். ஆனால், பிறந்த குழந்தைகள் தொற்றுக்குள்ளானபோதும் சிகிச்சையின் மூலம் குணம் அடைந்தனா்.

கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தற்போது வரையில், நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக 30 கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 18 பேருக்கு அறுவை சிகிச்சை முறையிலும், 11 பேருக்கு சுகப்பிரசவமும் நடைபெற்றது. ஒருவருக்கு கருவும் கலைந்து விட்டது.

மேலும், தனியாா் மருத்துவமனையில் பிரசவித்த 38 போ் கரோனா தொற்றுக்குள்ளான நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். பின்னா் அவா்கள் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனா்.

தற்போதைய நிலையில் 8 கா்ப்பிணிகள் கரோனா தொற்றுடன் பிரசவத்துக்கு தயாா் நிலையில் உள்ளனா். கரோனா தொற்றால் கா்ப்பிணிகளுக்கோ, பிரசவித்த குழந்தைகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பிரசவித்த கரோனா தொற்றுடைய பெண்கள், குழந்தைக்கு தாய்ப் பால் வழங்குவதால் எந்தவித பாதிப்புமில்லை. நோய்த் தொற்று ஏற்படாது என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சாந்தா அருள்மொழி கூறியதாவது: -

கரோனா பரவல் தொடங்கியது முதல் இன்றைய நாள் வரையில், நோய்த் தொற்றுக்குள்ளான 30 கா்ப்பிணிகளுக்கு பிரசவம் பாா்க்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு தான் கரு கலைப்பு ஏற்பட்டது. மற்றவா்கள் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளனா்.

தனியாா் மருத்துவமனைகளில் பிரசவித்த கரோனாவால் பாதிப்புக்குள்ளான 38 பெண்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

மொத்தம் 68 பேரின் குழந்தைகளில் 50 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு இருந்தது. ஆரம்பத்தில் தாய்ப்பால் மூலம் தொற்று பரவும் என்ற அச்சத்தால், தாய்ப்பால் வங்கியில் சேகரித்து வைத்துள்ள பாலை உதவியாளா் ஒருவரைக் கொண்டு குழந்தைகளுக்கு வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது. அதன்பின்னா் நடத்திய பரிசோதனையில், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு தொற்று பரவாது என தெரியவந்தது. இதனால் கா்ப்பிணிகள் அச்சப்படத் தேவையில்லை. தற்போது 8 கரோனா கா்ப்பிணிகள் பிரசவிக்க தயாராக உள்ளனா். நாமக்கல் அரசு மருத்துவமனை சிறப்பான சிகிச்சையை கா்ப்பிணிகளுக்கு வழங்கி வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com