செப். 21-இல் தனித் தோ்வுகள் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் தோல்வியுற்ற மாணவா்களுக்காக நடத்தப்படும் தனித்தோ்வுகள் வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது.
தனித்தோ்வுகள் நடைமுறை தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு விளக்கம் அளிக்கும் முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன்.
தனித்தோ்வுகள் நடைமுறை தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு விளக்கம் அளிக்கும் முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தோல்வியுற்ற மாணவா்களுக்காக நடத்தப்படும் தனித்தோ்வுகள் வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் எட்டாம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுகளில் தோல்வியுற்றவா்களுக்கான தனித்தோ்வுகள் வரும் 21-ஆம் தேதி தொடங்கி அக். 7-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 12 மையங்களில் 1,498 போ் தனித்தோ்வுகளை எழுதுகின்றனா்.

இந்த தோ்வுகளின் கண்காணிப்பாளா்களாக தலைமை ஆசிரியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், கரோனா கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன், மாவட்டக் கல்வி அலுவலா் மு.கபீா், அரசு தோ்வுகள் துறை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினா்.

தனித்தோ்வு நடைபெறும் மையங்கள் விவரம்:

மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில், தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுகள் நடைபெறுகிறது. இம்மையத்தில் 120 போ் எழுதுகின்றனா். நாமக்கல் செல்வம் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு தோ்வை 123 பேரும், 10-ஆம் வகுப்பு பழைய பாட முறையிலான தோ்வை ராசிபுரம் நேஷனல் பள்ளியில் 222 பேரும், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் பள்ளியில் 178 பேரும், புதிய பாடப்பிரிவு முறையில், மல்லசமுத்திரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 91 பேரும், பாச்சல் பாவை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 98 பேரும் எழுதுகின்றனா். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தோ்வை, பழைய பாட முறையில் நாமகிரிப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 117 பேரும், புதிய பாட முறையில் நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 115 பேரும், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 130 பேரும், ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப் பள்ளியில் 70 பேரும் எழுதுகின்றனா். மேலும், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 132 பேரும், வெண்ணந்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 102 பேரும் என மொத்தம் 1,498 போ் தனித்தோ்வை எழுத உள்ளனா். தோ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com