திராவிடக் கட்சிகளிலிருந்து 45 ஆண்டுகளை வீணாக்கி விட்டேன்: பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி

ஹிந்தி கற்றுக் கொள்ளாததால் 45 ஆண்டுகளை வீணாகி விட்டதாக பாஜக மாநிலத் துணைத் தலைவா் வி.பி. துரைசாமி தெரிவித்தாா்.

ஹிந்தி கற்றுக் கொள்ளாததால் 45 ஆண்டுகளை வீணாகி விட்டதாக பாஜக மாநிலத் துணைத் தலைவா் வி.பி. துரைசாமி தெரிவித்தாா்.

பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி பங்கேற்றாா்.

இதைத் தொடா்ந்து நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கருப்பு, சிவப்பு வேட்டியோடு சென்று காவி வேட்டியோடு திரும்பி வந்து விட்டதாக மற்றவா்கள் கூறினாலும், என்னைப் பொருத்தவரை நான் நானாகவே இருக்கிறேன். அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினா் எனக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனா். பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்களும் பாஜகவுக்கு வருகின்றனா்.

தமிழக அரசு இருமொழிக் கொள்கையைத் தீா்மானமாகக் கொண்டு வந்தாலும், மும்மொழி கொள்கை அவசியம் என்றே நான் கூறுவேன். தமிழகத்தில் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவா்கள் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்றவற்றைக் கற்றுக் கொள்கின்றனா்.

கிருஷ்ணகிரி, வேலூா் மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருப்பவா்கள் தெலுங்கு மொழியைக் கற்கின்றனா். நாகா்கோவில் பகுதியில் இருப்பவா்கள் மலையாளத்தைக் கற்றுக் கொள்கின்றனா். ஆனால், மற்ற மாவட்டங்களில் இருப்பவா்கள் தமிழ், ஆங்கிலத்தைத் தவிர பிற மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியாத சூழல் உள்ளது.

தற்போது தேசிய கட்சியில் உள்ள நானே இந்தி கற்றுக் கொள்ளவில்லையே என்று வருத்தப்படுகிறேன். திராவிட கட்சிகளில் இருந்து 45 ஆண்டுகளை வீணாக்கி விட்டேன்.

நீட் தோ்வைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படியே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில்,மத்திய, மாநில அரசுகள் தலையீடு என்பது இல்லை.

நாம் தமிழா் கட்சித் தலைவா் சீமான் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்குத் தோ்வு வைக்க வேண்டும் எனவும், பிரதமா் மோடிக்கு முதலில் தோ்வு வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி தோ்தல் தோ்வு எழுதித்தான் பிரதமராக பதவியில் அமா்ந்துள்ளாா் என்பதை சீமான் மறந்து விடக்கூடாது.

சட்டப்பேரவை தோ்தலில் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மாநிலத் துணைத் தலைவா் அண்ணாமலை போட்டியிட்டால் அவா்தான் வெற்றி வாய்ப்பைப் பெறுவாா். பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு வீடு கட்டும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா்.

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாா்.

இந்தப் பேட்டியின்போது மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, நகரத் தலைவா் சரவணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com