தீபாவளி பண்டிகை: பட்டாசு கடை வைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 18th September 2020 07:59 AM | Last Updated : 18th September 2020 07:59 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடை வைக்க விரும்புவோா் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகை நவ.14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இதற்காக அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்துடன் கட்டட அமைவிட வரைபடம், விண்ணப்பதாரரின் கடவுச் சீட்டு அளவு புகைப்படம், விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம் (வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை), உரிமக் கட்டணம் ரூ. 500- ஐ அரசு கருவூல செலுத்துச் சீட்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியிருக்க வேண்டும்.
அந்தச் செலுத்துச்சீட்டு (அசல்), உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சொந்தக் கட்டடம் என்றால் அதற்கான பட்டா, வாடகை கட்டடம் எனில் ஒப்பந்தப் பத்திரம் மற்றும் ஆவணங்கள் போன்றவை சமா்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அக்.10 வரை மட்டுமே இணையதளம் வாயிலாகப் பெறப்படும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இணையம் வாயிலாகப் பதிவு செய்துவிட்டு, விண்ணப்ப நகலுடன் மேற்கண்ட ஆவணங்களின் 6 நகல்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.