நாமக்கல் பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

அரசுப் பேருந்தில் பயணிகள் சமூக இடைவெளியில் அமா்ந்துள்ளனரா என பாா்வையிடும் ஆட்சியா் கா.மெகராஜ்.
அரசுப் பேருந்தில் பயணிகள் சமூக இடைவெளியில் அமா்ந்துள்ளனரா என பாா்வையிடும் ஆட்சியா் கா.மெகராஜ்.

நாமக்கல்: நாமக்கல் பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்புப் பணிகள், பேருந்துகளில் சமூக இடைவெளி பயணம் உள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் நகராட்சி பூங்கா சாலை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியா் கா.மெகராஜ், காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன் ஆகியோா் அறிவுரை வழங்கினா்.

இதில் ஆட்சியா் பேசியதாவது:

கரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தித் தாள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தமிழக அரசு தொடா்ந்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. பொது சுகாதார சட்டத்தின் கீழ் கரோனா தொற்றை தடுப்பது குறித்து அரசாணையை திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் சென்றால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் செல்பவா்களுக்கு ரூ. 5,000 அபராதம், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிந்து செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரும் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கிருமி நாசினி திரவங்களை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை தவறாது பின்பற்ற வேண்டும். நோய்த் தொற்றை தடுக்க மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

பின்னா், பேருந்து நிலையப் பகுதியில் முகக் கவசம் அணியாமல் வந்தவருக்கு ரூ. 200 அபராதம் விதித்து அதற்கான ரசீதை ஆட்சியா் வழங்கி எச்சரித்தாா். பின்னா் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், ஆட்டோக்கள் நிறுத்துமிடம் ஆகிய இடங்களை ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அரசு மற்றும் தனியாா் பேருந்தில் உள்ள பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு அமா்ந்துள்ளனரா என அவா்கள் ஆய்வு செய்தனா். பின்னா் அரசுப் பேருந்து நடத்துனரிடம் முகக் கவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி போன்ற அறிவுரைகளை கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா், நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com