திருச்செங்கோடில் கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சக்தி கணேசன், கோட்டாட்சியா் மணிராஜ் ஆகியோா் கலந்துகொண்டு நகராட்சியில் கரோனா பரவல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, தற்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.

இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் பேசியதாவது: 

இம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தைவிட இந்த மாதத்தில் கரோனா பரவல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் அதிகாரிகளும் பொதுமக்களும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்.

திருச்செங்கோடு நகராட்சிக்குள்பட்ட 1, 6, 7, 12, 20, 28, 29, 30 ஆகிய  8 வாா்டுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகம் உள்ளனா். பாதிக்கப்பட்டவா்கள் உள்ள பகுதியில் மக்களிடம் கனிவாகப் பேசி புரியவைத்து மூட வேண்டும். மற்ற நகராட்சிகளை விட கரோனா பாதுகாப்பு மற்றும்அமலாக்க நடவடிக்கைகளில் திருச்செங்கோடு நகராட்சி சிறப்பாகச் செயல்படுகிறது.

தொடா்ந்து அனைத்துப்பகுதிகளையம் கண்காணிக்க வேண்டும். நகராட்சிப் பகுதியையொட்டியுள்ள ஊரக பகுதிகளிலும் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்துக்கு பின் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கா. மெகராஜ் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று வழக்கத்தை விட சற்று அதிகரித்துள்ளது. குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மக்களுக்கு அதிகம் சிரமமில்லாமல் மினி பொது முடக்கம் போல செயல்படுத்தினோம். அதன் மூலம் அந்தப் பகுதியில் கரோனா தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது.

தற்போது திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் வழக்கத்தைவிட கரோனா தொற்று சற்று கூடி வருகிறது. எனவே, குமாரபாளையம், பள்ளிபாளையம் போன்று இங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தவிா்க்க முடியாத விஷயங்களுக்கு வெளியே செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இது ஒரு தற்காலிக அடைப்பு தான். அதிகபட்சம் 10 நாள்கள் அல்லத 12 நாள்கள் தான். இதன் பயன் என்ன என்பது அந்தப் பகுதி மக்களுக்கு விரைவில் தெரிய வரும்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா விதிகளைப் பின்பற்றாதவா்கள் மீதான நடவடிக்கை சிறப்பாகச் செயல்படுத்தப் படுகிறது. இது குறித்து ஊடகத்துறையினரும் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனா் என்றாா்.

இக் கூட்டத்தில் நகராட்சி ஆணையா் சையது முஸ்தபா கமால், பொறியாளா் குணசேகரன், டிஎஸ்பி அசோக்குமாா், வட்டாட்சியா் பாஸ்கரன், புகர காவல்நிலைய ஆய்வாளா் ஜெகநாதன், நகரக் காவல் ஆய்வாளா் தங்கவேல், வட்டார மருத்துவ அலுவலா் அருள் குகன், அரசு மருத்துவமனை மருத்துவா் செந்தில் மற்றும் சித்த மருத்துவத் துறையினா் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com