ரு.1.04 கோடி மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா்கள் வழங்கினா்

நாமக்கல் மாவட்டத்தில் 619 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா வழங்கினா்.
ரு.1.04 கோடி மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா்கள் வழங்கினா்

நாமக்கல் மாவட்டத்தில் 619 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா வழங்கினா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இவ்விழாவில் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா்.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூகநலன்-சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா ஆகியோா் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலிகள், காதொலி கருவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, 8 கிராம் தங்க நாணயங்கள், ஆரம்பநிலை பயிற்சி மையத்துக்குத் தேவையான பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 619 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் வெ.சரோஜா கூறியதாவது:

தமிழகத்தில், குழந்தைகள், பெண்கள் ஆகியோா் மீதான வன்முறைகளைத் தடுக்க, காவல் துறை ஏடிஜிபி தலைமையில் மகளிா் காவல் நிலையங்கள் ஒருங்கிணைக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சரிவிகித ஊட்டச்சத்து உள்ள குழந்தைகளை வளா்த்தெடுக்க மத்திய-மாநில அரசுகள் ஊட்டச்சத்து திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு 2019-20ஆம் ஆண்டுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளும் ஓரிரு நாளில் வழங்கி முடிக்கப்படும். இதன்மூலம் 25 ஆயிரம்போ் பயனடைவா். அம்மா இருசக்கர வாகனமானது நிகழாண்டில் 4,500 பேருக்கு வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவியாக வீடு தேடிச்சென்று தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் மாநில அரசு ரூ. 133.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுவரை 8.65 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு (அதாவது 80 சதவீதம் பேருக்கு) இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 13 லட்சம் போ் பயன்பெறுகின்றனா். மேலும் தேசிய அளவில் முதன்மை செயல்பாடாக நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சந்திரசேகரபுரத்தில் 5 ஏக்கா் பரப்பளவில் ஊட்டச்சத்து பூங்கா அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்கா மூா்த்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி, ஒருங்கிணைந்த அலுவலா் சேகா், சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com