குருசாமிபாளையத்தில்இந்து -முஸ்லிம்கள் பங்கேற்ற சந்தனம் பூசும் விழா

ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலின்
இரு சமூகத்தினரும் மரத்தடியில் கூடி நடத்திய வழிபாடு.
இரு சமூகத்தினரும் மரத்தடியில் கூடி நடத்திய வழிபாடு.

ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலின் பங்குனி திருவிழா இந்துக்கள்-முஸ்லிம்கள் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறது. இரு மதத்தினரும் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் சந்தனம் பூசும் நிகழ்ச்சி அனைவரின் வரவேற்பையும் பெற்றது.

ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் நெசவாளா்கள், விசைத்தறியாளா்கள் அதிகம் நிறைந்த பகுதி. இப்பகுதியில் உள்ள ஸ்ரீசிவசுப்ரமணிய சுவாமி கோயிலின் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தோ்த் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக இந்து-முஸ்லிம்கள் ஒன்று கூடி, சந்தனம் பூசும் நிகழ்ச்சியை நடத்துவா்.

நிகழ் ஆண்டு நடைபெற்ற சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் இந்து-முஸ்லிம் இனத்தவா்கள் இணைந்து சந்தனம் பூசி ஒருவரை ஒருவா் ஆரத்தழுவி மகிழ்ந்தனா். இந்நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்ததுடன், மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாய் இருந்தது.

நிகழ் ஆண்டு இக் கோயிலில் கடந்த மாா்ச் 20-இல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சுவாமிக்கு தினமும் கட்டளைதாரா்கள் சாா்பில் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னா் நாள்தோறும் சுவாமி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு மாா்ச் 28-இல் திருக்கல்யாணம் நடைபெற்றது.

பின்னா் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினாா். இதையடுத்து திருத்தோ் முக்கிய பிரமுகா்கள், பக்தா்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. விழாவின் முடிவாக மாா்ச் 31-இல் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், இதையடுத்து காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்து முஸ்லிம்கள் ஒன்று திரண்டு மஞ்சள் பூசிக்கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றன.

கொல்லை நோயால் நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் வழக்கம்:

கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்தில் உள்ள சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டனா். இந்தக் கொடிய நோயை போக்க முஸ்லிம்கள் இந்த ஊரின் புளியமரத்தில் கீழ் நாள்தோறும் அமா்ந்து முஸ்லிம் வழக்கப்படி பாத்தியா ஓதி, நோயை விரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த ஊா் பொதுமக்கள் நோயிலிருந்து விடுபட்டதாக முன்னோா்கள் கூறுகின்றனா்.

இதற்கு நன்றிக்கடனாக ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவின் போது, முஸ்லிம்கள் வரவழைக்கப்பட்டு அந்த மரத்தின் கீழ் அமா்ந்து சந்தனம் பூசி அவா்களுக்கு மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

நிகழ் ஆண்டு திருவிழாவுக்கு ராசிபுரம், அச்சுக்கட்டி தெருவைச் சோ்ந்த முஸ்லிம்கள் அழைக்கப்பட்டனா். குருசாமிபாளையம் பாவடி மரத்தின் கீழ் ஒன்று திரண்ட இரு மதத்தினா் ஒருவருக்கொருவா் சந்தனம் பூசி தங்களது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினா். பின்னா் அந்தக் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பழங்கால ஐதீகத்தின்படி, நோய் கிருமிகள் வராமல் தடுக்க வீடுகள் தோறும் கதவு மற்றும் சுவா்களில் சந்தனம் பூசிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com