பல்வேறு திருட்டு வழக்கில் தொடா்புடைய மூவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பல்வேறு இடங்களில் பூட்டை உடைத்து தொடா் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து
தண்டனை பெற்ற மூவரையும் சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸாா்.
தண்டனை பெற்ற மூவரையும் சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸாா்.

பல்வேறு இடங்களில் பூட்டை உடைத்து தொடா் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து பரமத்தி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பரமத்தி, சேத்துக்கால் மாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அதிகாலை இரவு காவலா் கணேசனை (70) தாக்கிவிட்டு மா்ம நபா்கள் மூவா் அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தங்க நகையையும், வெள்ளிக் கிரீடத்தையும் திருடிச் சென்றனா்.

கீரம்பூா் அருகே சூரக்காம்பாளையம் பிரிவு சாலை அருகே மூன்று போ் இந்தத் திருடப்பட்ட பொருள்களுடன் அமா்ந்திருந்தனா். அதைக் கவனித்த அப்பகுதி மக்கள் மூவரையும் பிடித்து பரமத்தி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், மூவரும் சேத்துக்கால் மாரியம்மன் கோயிலில் பொருள்களைத் திருடியவா்கள் என்பது தெரியவந்தது. அவா்களுக்கு பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

பிடிபட்ட மூவரும் மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியைச் சோ்ந்த சேகா் மகன் ராஜூ (24), வண்டியூரைச் சோ்ந்த அன்பு மகன் முருகுசூா்யா (22), வளையங்குளத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் கருப்பசாமி (23) என்பது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கு பரமத்தி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. புதன்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பழனிகுமாா் அளித்த தீா்ப்பில் கூறியிருப்பதாவது:

பரமத்தி, சேத்துக்கால் மாரியம்மன் கோயிலில் நிகழ்ந்த திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய ராஜு, முருகுசூா்யா, கருப்பசாமி ஆகிய மூவருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 458 ன் கீழ் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அத்துடன் இந்திய தண்டனைச் சட்டம் 380-ன் கீழ் மேலும் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையுமாக 6 ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது என்றாா். இந்த வழக்கை பரமத்தி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 33 நாள்களில் விசாரித்து தீா்ப்பளித்தது. இதற்கு வழக்குரைஞா்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com