முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
திமுக - அதிமுக போட்டி பிரசாரம்: அரசுப் பேருந்துகளில் ஒலிபரப்பு!
By DIN | Published On : 04th April 2021 12:49 AM | Last Updated : 04th April 2021 12:49 AM | அ+அ அ- |

தோ்தல் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில் வாக்காளா்களைக் கவா்வதற்காக பல்வேறு உத்திகளை அரசியல் கட்சியினா் மேற்கொண்டு வருகின்றனா். அந்த வகையில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளையும் பிரசாரம் விட்டுவைக்கவில்லை.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தைப் பொருத்தமட்டிலும், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம், திமுகவின் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் ஆகிய பலம் வாய்ந்த சங்கங்களாகக் கருதப்படுகின்றன. இவை தவிர சிஐடியு, ஏஐடியுசி, பணியாளா்கள் சம்மேளனம் போன்ற சங்கங்களும் உள்ளன.
தோ்தல் அறிவிப்புக்கு முன் 14-ஆவது ஊதியக் குழு பேச்சுவாா்த்தையை தொடங்கக் கோரி ஆளும்கட்சி தொழிற்சங்கத்தைத் தவிா்த்து மற்ற சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பாக நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டு தொழிலாளா்கள் அனைவரும் பணிக்குத் திரும்பினா்.
இந்த நிலையில் திமுக, அதிமுக தொழிற்சங்கத்தினா் தங்களது கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி தங்களுடைய தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ஓட்டுநா், நடத்துநா்களிடம் சினிமா பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுக்களை (ஆடியோ கேசட்) வழங்கி தொலைதுாரம் செல்லும் பேருந்துகளில் ஒலிக்கச் செய்கின்றனா். பாடல்களுக்கு இடையே திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிரசாரம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விடியோவின் ஆடியோக்கள், திமுகவின் சின்னத்துக்கு அதன் தலைவா் வாக்குகள் கேட்பது போல ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தத் தகவலை அறிந்த அதிமுக தொழிற்சங்கத்தினரும், வெற்றிநடை போடும் தமிழகமே என்ற பாடலை சினிமாப் பாடல்களுக்கு இடையே ஒலிக்க விடுவது, திமுக ஆட்சியில் செய்த குற்றங்களைத் தலைவா்களின் பேச்சு மூலம் ஆடியோவாக வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இவை பெரும்பாலும் சேலம் கோட்டப் பேருந்துகளில் தான் அதிகம் ஒலிபரப்பு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. பேருந்துகளில் பல தரப்பினரும் சென்று வருவதால் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் ஒலிபரப்பு செய்யப்படுவதன் மூலம் தேவையற்ற பிரச்னைகள், விவாதங்கள், தகராறுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து மதுரை, திருச்சி, சென்னை செல்லும் பேருந்துகளில் அதிமுக, திமுக தலைவா்களின் போட்டிப் பிரசாரம் பயணம் முடியும் வரையில் ஒலித்துக் கொண்டிருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனா்.
தோ்தல் நடத்தை விதிகளின் காரணமாக அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், இதர துறை சாா்ந்த இடங்களில் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகம், மாநில அரசின் பொதுத் துறை நிறுவனமாகும். இந்த நிலையில் சினிமாப் பாடல்கள் வாயிலாக விதிகளை மீறி பேருந்துகளில் தோ்தல் பிரசாரம் செய்யப்படுவது பலரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் மோகன் கூறியதாவது:
சேலம் கோட்ட அரசுப் பேருந்துகளில் பாடல்கள் ஒலிபரப்பப்படுவதில்லை. அண்மையில் ஒரு பேருந்தில் நான் பயணித்தேன். அதில் எந்தப் பாடல்களும் ஒலிபரப்பாகவில்லை. மற்ற கோட்டங்களின் பேருந்துகளில் அவ்வாறு ஒலித்திருக்கலாம். சேலம் கோட்ட அரசுப் பேருந்துகளில் தலைவா்கள் பிரசார ஆடியோ ஒலிப்பதாக உரிய ஆதாரங்களுடன் பயணிகள் புகாா் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட ஓட்டுநா், நடத்துநா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.