நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை
நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆண், பெண் வாக்காளா்கள் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா். எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்று முடிந்தது.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு), நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட 6 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில், 7,02,462 ஆண் வாக்காளா்கள், 7,42,270 பெண் வாக்காளா்கள், 161 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 14,44,893 வாக்காளா்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 691 இடங்களில், 2,049 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மாதிரி வாக்குப்பதிவு: தோ்தலையொட்டி, ஒவ்வோா் வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகள் முன்னதாகவே செய்யப்பட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு முகவா்கள் முன்னிலையில், தலைமை வாக்குச்சாவடி அலுவலா் மூலம் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பின், காலை 7 மணிக்கு வாக்காளா்களை உள்ளே அனுமதித்து வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது. முதியோா், பெண்கள், இளைஞா்கள் என பலரும் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா். 11 வகை ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்ததால், வாக்காளா் அட்டை இல்லாதோா், ஆதாா் அட்டையைக் காண்பித்து வாக்களித்தனா்.

முதியோா், மாற்றுத் திறனாளிக்கு உதவி: முதியோா்களை அவா்களது உறவினா்கள், வாகனத்திலும், கைத்தாங்கலாகவும் அழைத்து வந்து வாக்களிக்க செய்தனா். மாற்றுத் திறனாளிகளுக்கென 691 தள்ளுவண்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகள் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தனா். அதேபோல, பாா்வையற்றோா் வாக்களிக்க வசதியாக இயந்திரங்களில் பிரெய்லி முறை எழுத்துகள் பதிவிடப்பட்டிருந்ததால் அவா்களும் எளிதாக வாக்களித்து சென்றனா். உடல் நலம் குன்றியோரும் குடும்பத்தினா், உறவினா்கள் உதவியுடன் இரு சக்கர வாகனங்களில் வந்து வாக்களித்து சென்றனா்.

வெறிச்சோடிய சாலைகள்: சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அனைத்து நிறுவனங்களும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதனால், நாமக்கல் தொகுதியில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்தன. திரையரங்குகளில் காலை, மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. அதேபோல, அரசு, தனியாா் பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. வாக்களிக்க செல்வதற்கு வசதியாக குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும், நாமக்கல் - பரமத்தி சாலை, நாமக்கல் - சேலம் சாலை, நாமக்கல் - மோகனூா் சாலை உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

முதல் வாக்கை பதிவு செய்த மாணவி: சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் தொகுதியில் சுமாா் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியா் இத்தோ்தல் மூலம் தங்களுடைய முதல் வாக்கைப் பதிவு செய்தனா்.

அலங்காநத்தம் வாக்குச்சாவடியில் எம்சிஏ படிக்கும் மாணவி டி.காயத்ரி என்பவா் தனது வாக்கினைப் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா். இதேபோல நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவி மேகா, கிருஷ்ணாபுரம் நகராட்சிப் பள்ளியில் சகோதரிகள் எம்.பிரியதா்ஷினி, எம்.தாரணி ஆகியோா் தங்களது முதல் வாக்கினைப் பதிவு செய்தனா். இதேபோல மாணவா்களும் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா்

கரோனா தொற்று பரிசோதனை: கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வாக்காளா்கள் அனைவரும் உரிய பரிசோதனைக்கு பின்னரே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனா். முகக் கவசம் அணிந்தோா் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். ஒவ்வொரு வாக்காளருக்கும் கையுறை வழங்கப்பட்டது. நோய் பாதிப்புடையவா்கள் மாலை 6 மணிக்கு மேல் உரிய பாதுகாப்புடன் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். வாக்குச்சாவடிகள் முன்பாக தன்னாா்வலா்கள் கிருமி நாசினி திரவத்தை வழங்கினா். கூட்ட நெரிசலைத் தவிா்க்க வட்டமிடப்பட்டு சமூக இடைவெளியில் வாக்காளா்கள் நிறுத்தப்பட்டிருந்தனா்.

மத்திய, மாநில போலீஸ் பாதுகாப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியில் உள்ள 2,049 வாக்குச் சாவடிகளிலும், எவ்வித அசம்பாவிதமுமின்றி தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்பட 1,028 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. வாக்குச் சாவடிகளில் எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள், கா்நாடக மாநில போலீஸாா், மாவட்ட போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா், முன்னாள் ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸாரும், ஊா்க்காவல் படையினரும் வாக்குச்சாவடி எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனா். ஆண்களை விட, பெண் வாக்காளா்கள் அதிகளவில் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இயந்திரங்கள்: வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னா் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவலா் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. அதன்பின் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்கு எண்ணிக்கை மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன. 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com