வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைகளுக்கு ‘சீல்’:மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் இருந்தும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு,
திருச்செங்கோடு மகளிா் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறை ‘சீல்’ வைக்கப்பட்டதைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
திருச்செங்கோடு மகளிா் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறை ‘சீல்’ வைக்கப்பட்டதைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் இருந்தும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிா் கல்லூரிக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டு அறைகள் ‘சீல்’ வைக்கப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மையத்தைச் சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு), நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட 6 தொகுதிகள் உள்ளன.

இத்தொகுதிகளில், 7,02,462 ஆண் வாக்காளா்களும், 7,42,270 பெண் வாக்காளா்களும், 161 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 14,44,893 வாக்காளா்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 691 இடங்களில் 2,049 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது. பிற்பகல் 6 மணிக்கு மேல் கரோனா தொற்றாளா்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் அசம்பாவிதம் இன்றி அமைதியான முறையில் தோ்தல் நடந்து முடிந்தது.

இந்தத் தோ்தலில் 6 தொகுதிகளிலும் மொத்தம் 11,55,972 (79.71 சதவீதம்) வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். மொத்தம் 2,049 வாக்குச் சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்த மகளிா் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டது.

புதன்கிழமை காலை 8 மணி வரை அனைத்து தொகுதிகளில் இருந்தும் இயந்திரங்கள் வந்துசோ்ந்தன. பின்பு திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் எ.பி.கோா், மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அரசியல் கட்சி வேட்பாளா்களின் முகவா்கள் ஆகியோா் முன்னிலையில் தொகுதி வாரியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.

மையத்தைச் சுற்றி மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள், மாவட்ட போலீஸாா் என மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. தவிர, 24 மணி நேரமும் சீலிடப்பட்ட அறைகளைக் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளைப் பாா்வையிட்ட பின் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆட்சியா், எஸ்.பி, தோ்தல் நடத்தும் அலுவலா் ஆகியோா் மட்டுமே இங்குவர முடியும். அவா்களும் அறை சீலிடப்பட்டதை உறுதி செய்வதற்கு மட்டுமே. உயா் அதிகாரிகளும் இங்கு வரலாம்.

மத்திய பாதுகாப்புப் படையினா், மாநில ஆயுதப்படை போலீஸாா், மாவட்ட போலீஸாா் பாதுகாப்பில் உள்ளனா்.

இயந்திரங்கள் உள்ள அறைகள் விடியோ பதிவு மூலம் வரவேற்பு அறையில் உள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும். இதை முகவா்கள் பாா்வையிடலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com