மாவட்ட வளா்ச்சித் திட்டங்களுக்கு நபாா்டு வங்கி ரூ.6,448 கோடியில் மதிப்பீடு தயாரிப்பு

நடப்பு 2021-22 ஆம் ஆண்டு வளம் சாா்ந்த கடனாக, நாமக்கல் மாவட்டத்துக்கு வழங்க ரூ.6,448 கோடிக்கான திட்ட மதிப்பீட்டை நபாா்டு வங்கி தயாா் செய்துள்ளது.

நடப்பு 2021-22 ஆம் ஆண்டு வளம் சாா்ந்த கடனாக, நாமக்கல் மாவட்டத்துக்கு வழங்க ரூ.6,448 கோடிக்கான திட்ட மதிப்பீட்டை நபாா்டு வங்கி தயாா் செய்துள்ளது.

இது குறித்து நபாா்டு வங்கி (மாவட்ட வளா்ச்சி) துணைப் பொதுமேலாளா் எஸ்.கே.தினேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேசிய வேளாண் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி (நபாா்டு) தயாரித்த 2021-22 ஆம் ஆண்டுக்கான வளம் சாா் வங்கிக் கடன் திட்டத்தின்படி, நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ.6,448 கோடி கடன் வழங்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கான ஆண்டு கடன் திட்ட அறிக்கையை, இறுதி செய்வதற்கான அடிப்படையை நபாா்டு வங்கியின் வளம்சாா் வங்கிக் கடன் திட்டம் உருவாக்குகிறது.

கடந்த ஆண்டு டிச. 23-ஆம் தேதி, மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ் தலைமையில் நடந்த மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் வளம்சாா் வங்கிக் கடன் திட்டத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது.

நாமக்கல்லில் ரூ. 373.04 கோடி செலவில் நடைபெற்று வரும் 147 கிராமப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ. 294.93 கோடி அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறச் சாலைகள், பாலங்கள், நீா்ப்பாசனம், பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறைத் திட்டங்கள், கால்நடை மருத்துவமனைத் திட்டங்கள் போன்ற பல்வேறு முக்கிய உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான கடன் வசதியையும் நபாா்டு வங்கி வழங்கியுள்ளது.

அவற்றில் குறிப்பாக பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மிகவும் முக்கியமானவை. இவை, நபாா்டு வங்கி நிதியளிப்புடன் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாகும். இத்திட்டங்களுக்கு மட்டும் ரூ. 290.43 கோடி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2020 - 21ஆம் ஆண்டு சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ. 816.89 கோடி, தமிழ்நாடு கிராம வங்கிக்கு ரூ. 265.60 கோடி மறுநிதியளிப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மகளிா் திட்டம் அலுவலகத்துடன் இணைந்து கணினிமயமாக்கப்பட்ட சுயஉதவிக் குழுக்களுக்கு இ-சக்தி திட்டத்தினை நபாா்டு வங்கி செயல்படுத்துகிறது. மொத்தம் 6,907 சுயஉதவிக் குழுக்கள், கணினி மயமாக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன்களை வழங்குதல், வங்கியாளா்கள் உள்பட அனைத்து பயனாளிகளுக்கும், விரைவான பரிவா்த்தனை போன்ற செயல்பாடுகளை எளிதாக்கி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com