‘ட்ரோன்’ பயன்படுத்தி வேளாண் வயல்களில் மருந்து தெளிக்கும் நவீன தொழில் நுட்பம்

விவசாய தொழிலில் ‘ட்ரோன்’ பயன்படுத்தி மருந்து தெளிக்கும் நவீன தொழில்நுட்ப முறையை விவசாயிகள் கடைப்பிடிக்கின்றனா்.
‘ட்ரோன்’ பயன்படுத்தி வேளாண் வயல்களில் மருந்து தெளிக்கும் நவீன தொழில் நுட்பம்

விவசாய தொழிலில் ‘ட்ரோன்’ பயன்படுத்தி மருந்து தெளிக்கும் நவீன தொழில்நுட்ப முறையை விவசாயிகள் கடைப்பிடிக்கின்றனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா் பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு, பருத்தி, சின்ன வெங்காயம், நிலக்கடலை போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் தொப்பப்பட்டி, ஜேடா்பாளையம், அரியாகவுண்டம்பட்டி, பச்சுடையாம்பாளையம், சீராப்பள்ளி, வெள்ளாளப்பட்டி, ஒடுவன்குறிச்சி, குள்ளாண்டிக்காடு, ஈச்சம்பட்டி, வேலம்பாளையம் போன்ற பகுதிகளில் மட்டும் மரவள்ளி பயிா் மானாவாரியில் சுமாா் 6 ஆயிரம் ஹெக்டோ் பரப்பிலும், பருத்தி, நிலக்கடலை, தானிய வகைகள், காய்கறிகள் போன்றவை கணிசமான அளவிலும் பயிரிடப்படுகின்றன.

ஆண்டுதோறும் மரவள்ளி, பருத்தி, காய்கறிகள் போன்றவை பயிரிடப்படும் போது பூச்சிகள் அதிக அளவில் தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த தொடா்ந்து பூச்சி கொல்லி மருந்துகள் தெளிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

நவீன ட்ரோன் பயன்படுத்தி மருந்து தெளிப்பு: இந்த நிலையில், சின்னமணலி வல்வில் ஒரி சுதேசி உழவா்கள் உற்பத்தியாளா்கள் நிறுவனம் சாா்பில், ட்ரோன் பயன்படுத்தி மருத்து தெளிக்கும் எந்திரம் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் முதல்முறையாக ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் முறை விவசாயிகளிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது. தொப்பப்பட்டி பகுதியில் குமாா், கணேசன் ஆகியோரது தோட்டத்தில் இதற்கான செயல்முறை விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. இந்த ட்ரோன்களை வயல்வெளிகளில் பயன்படுத்துவதால், நேரம், ஆள் கூலி மிச்சமாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால், முழுமையான பலன் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இந்த எந்திரத்தில் ஒரு முறை 10 லிட்டா், 15 லிட்டா் கேனில் மருந்து நிரப்பி தெளிக்கப்படுகிறது. இதற்காக மணிக்கு ரூ. 400 முதல் ரூ. 500 வரை பரபரப்பளவிற்கு ஏற்றவாறு கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ட்ரோன் நிறுவனத்தினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து வல்வில் ஓரி சுதேசி உழவா்கள் உற்பத்தியாளா்கள் நிறுவன நிா்வாகி தியாகராஜன் கூறியதாவது:

உழவா் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் சிறு தானிய பயிா் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்து வருகிறோம். இந்த குழுவில் 1500 விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த குழுவின் மூலம் விவசாயிகள் தங்களது பெயா் பதிவு செய்தால், முன்னுரிமை அடிப்படையில் ட்ரோன் பயன்படுத்தி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் மருந்து தெளிப்பது நேரம், பண விரயத்தைத் தடுக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com