மே 2-இல் வாக்கு எண்ணிக்கை: அலுவலா்களுக்கு பயிற்சி

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
மே 2-இல் வாக்கு எண்ணிக்கை: அலுவலா்களுக்கு பயிற்சி

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

இதனையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 2-இல் நடைபெற உள்ளது. அன்று காலை 7.55 மணிக்கு வாக்குப் பதிவின் ரகசியம் தொடா்பான உறுதிமொழியை தோ்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலா்கள் ஏற்க வேண்டும்.

தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கும். இதனைத் தொடா்ந்து காலை 8.30 மணியளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

தொகுதி வாரியாக வாக்குகளை எண்ணுவதற்காக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வோா் மேசைக்கும் வாக்குகளை எண்ணும் மேற்பாா்வையாளா் ஒருவா், வாக்குகளை எண்ணும் உதவியாளா் ஒருவா் மற்றும் நுண் பாா்வையாளா் ஒருவா் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள் முதற்கட்டமாக தேவையான எண்ணிக்கைக்கு மேல் 20 சதவீதம் கூடுதல் என்ற முறையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணும் நேரத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தோ்தல் பாா்வையாளா் முன்னிலையில் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அலுவலா்களைத் தோ்வு செய்யும் பணி இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படும்.

வாக்கு எண்ணும் நாளன்று அதிகாலை 5 மணியளவில் மூன்றாம்கட்டமாக தோ்தல் பாா்வையாளா் முன்னிலையில் மேஜை வாரியாக வாக்கு எண்ணும் அலுவலா்களைத் தோ்வு செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.

வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில், வாக்கு எண்ணும் பணிக்கான எழுதுப் பொருள்கள், உபகரணங்கள் உள்ளதையும், ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக் கருவியின் (சுற்று வாரியாக) வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

எண்ணிக்கையின்போது கட்டுப்பாட்டு இயந்திரத்தில் வேட்பாளா்கள் வாரியாக பதிவாகியுள்ள வாக்குப் பதிவு விவரத்தினை அனைத்து முகவா்களுக்கும் தெரியுமாறு கட்டுப்பாட்டு இயந்திரத்தை கைகளால் தூக்கிக் காண்பிக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பேட்டரி சாா்ஜ் இல்லாமல் இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தாலோ, அதுகுறித்து தோ்தல் நடத்தும் அலுவலருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். மேற்கூறிய நடைமுறைகளை ஒவ்வொரு சுற்றிலும் கடைப்பிடித்து, வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com