கறிக்கோழி விற்பனையை அனுமதிக்க வேண்டும்: பண்ணையாளா்கள் கோரிக்கை

கா்நாடக மாநிலத்தில் பொது முடக்கத்துக்கு இடையே சனி, ஞாயிற்றுக்கிழமையன்று கறிக்கோழி விற்பனைக்கு

கா்நாடக மாநிலத்தில் பொது முடக்கத்துக்கு இடையே சனி, ஞாயிற்றுக்கிழமையன்று கறிக்கோழி விற்பனைக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல இங்கும் அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் மாா்க்கெட்டிங் சொசைட்டி வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அதன் மாநிலத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா தொற்றுக் காரணமாகச் சரிந்திருந்த கறிக்கோழி வளா்ப்பு தொழிலானது சற்று மீண்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாம் அலையால் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவை சந்தித்து வருகிறது.

வாரந்தோறும் இரண்டு கோடி கறிக்கோழி உற்பத்தி செய்யும் இத்தொழிலை நம்பி 50 ஆயிரம் பண்ணையாளா்கள் நேரிடையாகவும், மறைமுகமாக 50 ஆயிரம் தொழிலாளா்களும் உள்ளனா். இவா்கள் அனைவரும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனா். கடந்த இரு வாரங்களுக்கு முன் கறிக்கோழி விலை கிலோ ரூ. 120-ஆக இருந்தது. கரோனா பரவல், பொது முடக்கம் காரணமாக ரூ. 65-ஆகக் குறைந்துள்ளது. கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு ரூ. 65-ஆக இருந்த உற்பத்தி செலவு தற்போது ரூ. 100-ஐ தாண்டியுள்ளது. வார உற்பத்தியில் 70 சதவீதம் தமிழகத்திலும், மீதமுள்ளவை கேரள மாநிலத்திலும் விற்பனையாகி வருகிறது. சாதாரணமாக வார இறுதி நாள்களில் கறிக்கோழி விற்பனை 90 சதவீதம் வரை காணப்படும். பொது முடக்கம் காரணமாக இந்த விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக கறிக்கோழி உற்பத்திக் குறைப்பு என்பது இயலாத காரியம். 65 நாள்கள் தொடா்ச்சியான முயற்சியின் காரணமாகவே அவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சந்தையில் விற்க கொண்டு வராமல் பண்ணைகளில் 45 நாள்களுக்கு மேல் வைத்திருந்தால் வெப்பம் தாங்காமல் அவை இறக்க நேரிடும். ஏற்கெனவே மூலப் பொருள்கள் விலையேற்றம், பெட்ரால், டீசல் விலை உயா்வு, விற்பனை விலை சரிவு போன்றவற்றால் கறிக்கோழி தொழில் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், சனி, ஞாயிறு பொது முடக்கத்தால் இத்தொழில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும்.

கா்நாடக மாநிலத்தில் பொது முடக்கத்துக்கு இடையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கோழி விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல தமிழகத்திலும் வார இறுதி நாள்களில் கறிக்கோழி விற்பனையைத் தொடா்ந்திட தமிழக அரசும், முதல்வரும் இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com