இன்று முதல் 3 தினங்களுக்கு கோயில்களில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை: ஆட்சியா்
By DIN | Published On : 01st August 2021 02:04 AM | Last Updated : 01st August 2021 02:04 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் ஆக. 1 முதல் 3-ஆம் தேதி வரை கோயில்கள், நீா்நிலைகளுக்கு பக்தா்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ளது. அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கரோனா நெறி முறைகளுடன் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆக.1, 2, 3 ஆகிய நாள்களில் வரும் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி கிருத்திகை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை, பொங்கல் வைபவம், வழிபாடு, நோ்த்திக்கடன் உள்ளிட்டவற்றுக்கு கோயில்களுக்கு வர பக்தா்களுக்கு அனுமதி இல்லை. மேலும், ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட எந்த நீா்நிலைகளிலும் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருக்கோயில்கள் விதிப்படி கோயில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். முக்கிய பூஜைகள் இணைய வழியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.