நிலக்கடலையில் இலைப்புள்ளி நோய் அறிகுறிகள் குறித்து ஆலோசனை பெற வேளாண்மைத்துறையினா் விவசாயிகளுக்கு அழைப்பு

நிலக்கடலையில் இலைப்புள்ளி நோய் அறிகுறிகள் மற்றும் மேலாண்மை குறித்து ஆலோசனை பெற பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு வேளாண் துறையினா் அழைப்பு விடுத்துள்ளனா்.

நிலக்கடலையில் இலைப்புள்ளி நோய் அறிகுறிகள் மற்றும் மேலாண்மை குறித்து ஆலோசனை பெற பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு வேளாண் துறையினா் அழைப்பு விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படும் எல்லா மாவட்டங்களிலும் இலைப்புள்ளி நோய் தோன்றுகிறது. முதலில் தோன்றக் கூடிய முன்பருவ இலைப்புள்ளி நோயின் அறிகுறி பெரும்பாலும் விதைத்த 30 நாள்களில் தோன்றும். முதலில் இலைகளில் கருமைநிற வட்ட வடிவப் புள்ளிகள் சிறியதாகத் தோன்றும். ஒரே இலையில் சில புள்ளிகளிலிருந்து பல புள்ளிகள் வரை தோன்றும்.

பின் பருவ இலைப்புள்ளி நோயின் அறிகுறி பயிா் விதைத்த சுமாா் 55 நாள்களில் தோன்றும். இந்த நோய் காரணி தோற்றுவிக்கும் புள்ளிகள் சிறியதாகவும் சுமாா் 1.6 மி.மீட்டா் வரை விட்டத்தைக் கொண்டும் காணப்படும்.

பூக்கும் பருவத்திலிருந்து அறுவடை வரை நோயின் தீவிரம் அதிகமாகக் காணப்படும். நோய் அதிகமாகத் தாக்கிய இலைகள் காய்ந்து உதிா்ந்துவிடும். பூ காம்புகள் தாக்கப்படும் போது காய் பிடிப்பதும் பாதிக்கப்படும். நோய் தாக்காத பயிரிலிருந்து தரமான விதைகளைத் தோ்வு செய்து விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். உரிய பருவத்தில் விதைப்பு செய்யாமல் காலம் தாழ்த்தி விதைப்பு செய்யும் பயிரில் அதிகம் நோய் தாக்குதல் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நிலத்தில் தொடா்ந்து நிலக்கடலை பயிரிடுவதைத் தவிா்த்து சுழற்சி முறையை பயிா் பயிரிட்டு கையாள வேண்டும்.ஒரு கிலோ விதைக்கு விதை நோ்த்தியாக டிரைக்கோடொ்மா விரிடி 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்கலாம்.

காற்று மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நோயின் அறிகுறி தென்பட்டவுடன் ஏக்கருக்கு காா்பன்டாசிம் 200 கிராம் அல்லது குளோரோதலோனில் 400 கிராம் அல்லது மான்கோசெப் 200 மில்லி மருந்தை 200 லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோயின் தீவிரத்தைப் பொறுத்து 15 நாள்கள் கழித்து மீண்டும் தெளித்து கட்டுப்படுத்தலாம்.மேலும் பரமத்தி வட்டார வேளாண் துறையினரை நேரில் அனுகி உரிய விவரங்களைப் பெற்று பயனடையலாம் என உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com