முட்டை விலை மேலும் 30 காசுகள் குறைந்தது
By DIN | Published On : 13th August 2021 12:14 AM | Last Updated : 13th August 2021 12:14 AM | அ+அ அ- |

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 30 காசுகள் குறைந்து ரூ. 4.20-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. வட மாநிலங்களில் விழாக் காலமாக இருப்பதாலும், கரோனா பரவலால் பெரும்பாலான மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள், பிற மண்டலங்களில் தொடா்ந்து விலை சரிவு போன்றவற்றாலும், முட்டை விலையில் மாற்றம் செய்யப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 30 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.20-ஆக அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 97-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 70-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.