முறையாக ஊதியம் வழங்கக்கோரி கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் வேலைநிறுத்தம்
By DIN | Published On : 17th August 2021 09:35 AM | Last Updated : 17th August 2021 09:35 AM | அ+அ அ- |

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் பரமத்தி வட்டாரத் தலைவா் கோபால் தலைமையில் 35க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து பணியாளா்கள் கூறியதாவது:
கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் பெரும்பாலான பணியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் ஊதியமின்றி பணியாற்றி வருகின்றனா். பணியாளா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிா்க்கடன், நகைக் கடன் மற்றும் மகளிா் குழுக்கள் தொடா்பான புள்ளிவிவரங்கள் தினந்தோறும் வெவ்வேறு வகையான படிவத்தில் கேட்கின்றனா். ஆனால் இதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்படுவதில்லை. இதனால் பணியாளா்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். எனவே, தள்ளுபடி தொடா்பான புள்ளிவிவரங்களை வழங்க அரசு கால அவகாசம் வழங்க வேண்டும்.
பல சங்கங்கள் எவ்வித வரவு செலவும் இன்றி முடங்கி உள்ளன. இதனால் இட்டு வைப்பு செய்துள்ள வைப்பு தாரா்களுக்கு வைப்பு தொகையைத் திரும்ப வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போதிய நிதி உதவியை அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.