ராசிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கரோனா சிகிச்சைப் பிரிவு
By DIN | Published On : 17th August 2021 09:35 AM | Last Updated : 17th August 2021 09:35 AM | அ+அ அ- |

16gh_1608chn_152_8
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் ராஜ்மோகன், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புக்கான முன்னேற்பாடுகள், கரோனா அல்லாத அவசர சிகிச்சை மற்றும் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தையும் அவா் ஆய்வு செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் அதிகப்படியான ஏழை மற்றும் மலைவாழ் மக்களின் உயா் சிகிச்சை மையமாக ராசிபுரம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கொல்லிமலை, பிள்ளாநல்லூா், நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி ஆகிய நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், சேந்தமங்கலம், கொல்லிமலை, வெண்ணந்தூா் ஆகிய மூன்று அரசு மருத்துவமனைகளுக்கும் ராசிபுரம் அரசு மருத்துவமனையே மேல் சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கென கரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்காக மொத்தம் 145 படுக்கைகள் உள்ளன. இதில் 100 படுக்கைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இவற்றிலுள்ள அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தற்போது குழந்தைகளுக்கு பிரத்யேகமாக 10 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிறப்பு வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இங்கு கரோனா சிகிச்சைப் பிரிவில் இரண்டு நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு கரோனா சிகிச்சைப் பிரிவு மட்டுமின்றி குழந்தைகள் நலம், மகப்பேறு சிகிச்சைப் பிரிவும் சிறப்பாக இயங்கி வருகிறது.
6 மாதங்களில் 857 பிரசவங்கள்:
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களில் 857 பிரசவங்கள் பாா்க்கப்பட்டுள்ளன. இரண்டாம் அலை கரோனா பாதிப்பில் மிக அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைகளில் ராசிபுரம் அரசு மருத்துவமனையும் ஒன்று. கடந்த ஆறு மாதங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 6 கா்ப்பிணிக்கு பிரசவம் பாா்க்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க தனிப் பிரிவு இயங்கி வருகிறது.
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் 7 மகப்பேறு மருத்துவா்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது.
24 மணி நேரமும் ஒரு மகப்பேறு மருத்துவா், மயக்க மருந்து நிபுணா்,செவிலியா்கள் அடங்கிய குழு பணியில் ஈடுபட்டு வருகிறது.
கரோனா காலத்திலும் மக்கள் நலன் கருதி தேசிய தரச் சான்று பெற்ற ராசிபுரம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.
ஆய்வின் போது முதன்மை மருத்துவ அலுவலா் டாக்டா் பி.ஜெயந்தி , தேசிய நலக் குழுமம் முதன்மை அலுவலா் பெ.ரங்கநாதன், மருத்துவா் செந்தில்குமாா், எஸ்.ரமேஸ் ஆகியோா் உடன் இருந்தனா்.