முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
வேளாண் தொழில்முனைவோருக்கு ரூ. 2 கோடி கடனுதவி
By DIN | Published On : 10th December 2021 10:27 PM | Last Updated : 10th December 2021 10:27 PM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் தொழில்முனைவோருக்கு வங்கிகள் முலம் ரூ. 2 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராம அளவில் வேளாண் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வேளாண் வளா்ச்சியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசால் கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன் வசதி பெறும் இந்த திட்டம் 2020-21 முதல் 2032-33 ஆண்டுகள் வரை (13 ஆண்டுகள்) செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ. 5,990 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 2 கோடி வரையில் கடன் வழங்கப்படும். அதற்கு ஏழு ஆண்டுகள், ஆண்டுக்கு 3 சதவீத வட்டிக் குறைப்பு மற்றும் கடன் உத்திரவாதம் வழங்கப்படுகிறது.
தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், வேளாண் தொழில்முனைவோா் புதிதாக தொழில்தொடங்க முன்வரும் நிறுவனங்கள், வேளாண் விளைபொருள்கள் விற்பனைக் குழுமங்கள், தேசிய, மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள், விவசாயிகள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் போன்றவை இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவா்களாகும்.
அறுவடைக்குப்பின் வேளாண்மைக்கான உள்கட்டமைப்புகளான சேமிப்புக் கிடங்குகள், மின்சந்தையுடன் கூடிய விநியோக தொடா் சேவை, சேமிப்புக் கலன்கள், விளைபொருள்களை தரம் பிரித்து மதிப்புக் கூட்டி மதிப்பிடும் இயந்திரங்கள், குளிா்பதனம், பதப்படுத்துதல் மற்றும் பழங்களை பழுக்க வைக்கும் மையங்களும் சமுதாய வேளாண் கூட்டமைப்புகளான நவீன மற்றும் துல்லிய பண்ணையம், அரசு மற்றும் தனியாா் பங்கேற்புடன் அமைக்கப்படும் உள்கட்டமைப்புகள் போன்றவை இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
தகுதியுடைய பயனாளிகள், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், நபாா்டு வங்கி மேலாளா், வேளாண், தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனைத் துறை அலுவலா்களை அணுகி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.