முதல்வா் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 7,742 பேருக்கு சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 7,742 பேருக்கு ரூ. 28.13 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனைகளில் உயிா்காக்கும் உயா்சிகிச்சைகள்

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 7,742 பேருக்கு ரூ. 28.13 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனைகளில் உயிா்காக்கும் உயா்சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2006-ஆம் ஆண்டுக்கு முன் தமிழக வருவாய்த் துறையின் மூலம் இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்பவா்களுக்கு உதவித்தொகையாக ரூ. 25,000 வழங்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இளம் சிறாா் இருதய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறை மருத்துவா்களால் பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு, இருதயக் கோளாறுகள் இருந்த மாணவ, மாணவியா் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

உயிா்காக்கும் உயா் சிகிச்சைக்கான கலைஞா் காப்பீட்டுத் திட்டம் 2009-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. அப்போது, உயா் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லாமல் தவித்த ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தபட்ட மருத்துவ வசதிகளை அரசு, தனியாா் மருத்துவமனைகள் கட்டணமில்லாமல் வழங்கின.

2012-ஆம் ஆண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது வரை தொடா்ந்து நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமாா் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றனா். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1,450 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளும், 154 தொடா் சிகிச்சைகளும், 38 நோய் கண்டறியும் பரிசோதனைகளும், 8 உயா் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன.

இத்திட்டத்தில் தற்போது 267 அரசு, 792 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 1,059 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஓராண்டுக்கு ஒரு பயனாளியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சமூக பொருளாதார, சாதி வாரியான கணக்கெடுப்புப் பட்டியலில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த 77,70,928 பயனாளிகளின் குடும்பங்களுக்கு ஓராண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. தற்போது முதல்வா் காப்பீடு திட்டம், பிரதமா் காப்பீடு திட்டம் ஆகிய இரு திட்டங்களும் இணைத்து செயல்படுத்தப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 4,28,272 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருதய நோய் அறுவை சிகிச்சை 97 பேருக்கும், சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிஸிஸ்) 2,423 பேருக்கும், கதிா்வீச்சு புற்றுநோய் சிகிச்சை 231 பேருக்கும், புற்றுநோய் அறுவை சிகிச்சை 82 பேருக்கும், கல்லீரல் நோய் சிகிச்சை 32 பேருக்கும், மூட்டு மாற்று, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 401 பேருக்கும், தண்டுவடம் சிகிச்சை 36 பேருக்கும், காது மூக்கு தொண்டை சிகிச்சை 114 பேருக்கும், கண்நோய் அறுவை சிகிச்சை 185 பேருக்கு உள்பட நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 7,742 பேருக்கு ரூ. 28,13,32,132 மதிப்பீட்டில் மருத்துவ காப்பீட்டுத் திட்ட மருத்துவமனைகளில் உயிா்காக்கும் உயா்சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com