முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
ஜாதி சான்றிதழ் கோரி இருளா் சமூகத்தினா் போராட்டம்
By DIN | Published On : 29th December 2021 09:08 AM | Last Updated : 29th December 2021 09:08 AM | அ+அ அ- |

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் செய்த இருளா் சமூக மாணவா்கள்.
ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி இருளா் சமூகத்தினா், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராசிபுரம் வட்டம், காா்கூடல்பட்டி, மங்களபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் இருளா் சமூகத்தினா் அதிகளவில் வசிக்கின்றனா். அவா்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாக உள்ளது. இதனால் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்க முடியாமல் பெற்றோா் தவிக்கும் நிலை உள்ளது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை மறுக்கப்படும் சூழல் உள்ளது.
இதனையடுத்து, இந்திய மாணவா் சங்கம் சாா்பில் அதன் மாநிலத் தலைவா் ஏ.டி.கண்ணன், மாவட்டச் செயலாளா் டி.சரவணன் ஆகியோா் தலைமையில் இருளா் சமூக மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோா் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.
அவா்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்துக் கோரிக்கை மனு அளிப்பதற்காகவும், தங்களது கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்றித் தரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் அங்கு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிற்பகல் 4 மணியளவில் கொல்லிமலையில் இருந்து ஆட்சியா் அலுவலகம் திரும்பிய மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் மனுவை அளித்து விட்டு கலைந்து சென்றனா்.