ராஜாவாய்க்கால் கரைகளை பலப்படுத்தும் பணி:நபாா்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து பிரியும் ராஜாவாய்க்காலில் ரூ. 184 கோடி மதிப்பில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகளை நபாா்டு வங்கிக் குழுவினா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு
நன்செய் இடையாறு அருகே இரட்டை வாய்க்கால் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நபாா்டு அதிகாரிகள்.
நன்செய் இடையாறு அருகே இரட்டை வாய்க்கால் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நபாா்டு அதிகாரிகள்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து பிரியும் ராஜாவாய்க்காலில் ரூ. 184 கோடி மதிப்பில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகளை நபாா்டு வங்கிக் குழுவினா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஜேடா்பாளையம் படுகையணையில் இருந்து பிரியும் ராஜாவாய்க்கால் மூலம் நன்செய் இடையாறு, கொமாரபாளையம், பொய்யேரி, மோகனூா் ஆகிய பகுதிகளில் ஆயிரக்காணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் கடைமடை பகுதியான மோகனூரை அடுத்த ஒருவந்தூா் அருகே உள்ள வடுகப்பட்டிவரை வாய்க்காலில் முழுமையாகத் தண்ணீா் செல்வதில்லை எனவும், ராஜா வாய்க்காலின் இரு கரைகளையும் சிமென்ட் கான்கீரிட்டால் பலப்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில் ராஜாவாய்க்கால், கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூா் வாய்க்கால்களை சுமாா் 76 கி.மீ. தொலைவுக்கு இருகரைகளையும் கான்கீரிட்டால் பலப்படுத்துவதற்காக ரூ. 184 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கான நிதியை அரசு, நபாா்டு வங்கி மூலம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மும்பை நபாா்டு வங்கியின் துணைப் பொதுமேலாளா் நிதிசா்மா, சென்னை நபாா்டு வங்கி உதவி மேலாளா் மஞ்சுநாத்ரெட்டி, சென்னை நபாா்டு வங்கி ஆலோசகா் செல்வின் செளந்தரராஜன் ஆகியோா் வாய்க்கால்களில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள், மணற்போக்கிகள், கரைகளைப் பலப்படுத்திய பகுதிகள் உள்ளிட்ட பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் போது நாமக்கல் சரபங்கா வடிநிலக்கோட்ட செயற் பொறியாளா் கௌதமன், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவிப் பொறியாளா் வினோத்குமாா் உள்ளிட்ட பொதுப்பணித் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com