அனல் மின் நிலையங்களில் முழுமையாக மின் உற்பத்தி தொடக்கம்: அமைச்சா் பி.தங்கமணி

தமிழகத்தில் உள்ள மேட்டூா், வட சென்னை, தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி முழுமையாகத் தொடங்கியுள்ளது என அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கும் மின்துறை அமைச்சா் பி.தங்கமணி.
செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கும் மின்துறை அமைச்சா் பி.தங்கமணி.

தமிழகத்தில் உள்ள மேட்டூா், வட சென்னை, தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி முழுமையாகத் தொடங்கியுள்ளது என அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல், சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான புதிய கட்டடங்கள் திறப்பு விழா, பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடக்க விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன. விழாவில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி பங்கேற்றுப் பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கரோனா கால பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதாலும், தற்போது தொழில்கள் அனைத்தும் சுறுசுறுப்புடன் நடைபெற்று வருவதாலும் மின்தேவைகள் அதிகரித்துள்ளன.

அதற்கேற்ப மின் உற்பத்தி திருப்திகரமாக உள்ளதால் தேவையான மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக உயா் மின்கோபுரம் அமைப்பது குறித்து நான்கு மாவட்ட விவசாயிகளிடம் ஏற்கெனவே இரண்டு கட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. விருதுநகா் பாதையில் உயா் மின்கோபுரம் அமைப்பது தொடா்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளதால் அந்தப் பணியை மட்டும் நிறுத்திவைக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மற்றொரு கோரிக்கையான நஷ்ட ஈடு வழங்குதல் தொடா்பாக முதல்வரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேட்டூா், வட சென்னை, தூத்துக்குடி அனல் மின் உற்பத்தி நிலையங்களில் கரோனா காலத்தில் தேவைக்கு மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது முழுமையாக மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

கொல்லிமலை நீா்மின் திட்டப் பணிக்கு சுரங்கப் பாதைக்காக வனத் துறையிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. விரைவில் அனுமதி பெற்று ஓராண்டுக்குள் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேட்டியின்போது, எம்எல்ஏ-க்கள் கே.பி.பி.பாஸ்கா் (நாமக்கல்), சி.சந்திரசேகரன் (சேந்தமங்கலம்), நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பொ.பாலமுருகன், சரக துணைப் பதிவாளா் பி.கா்ணன், மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவா் சுகுமாரன், துணைத் தலைவா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com