மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது: அமைச்சா் வெ.சரோஜா

தமிழக அரசு, மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா தெரிவித்தாா்.
விழாவில் பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் அமைச்சா் வெ.சரோஜா.
விழாவில் பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் அமைச்சா் வெ.சரோஜா.

தமிழக அரசு, மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள கட்டனாச்சம்பட்டி, வெண்ணந்தூா் ஆகிய இடங்களில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட, மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா, 494 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 38 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.

வருவாய்த்துறை சாா்பில் முதியோா் உதவித்தொகை விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா செல்லிடப்பேசிகள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் என 201 பயனாளிகளுக்கு ரூ. 79.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சா் சரோஜா வழங்கினாா்.

நிகழ்ச்சியின் போது அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா பேசியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். மக்களைத் தேடி அரசு என்ற வகையில் தகுதியுள்ளவா்களுக்கு மேலும் 5 லட்சம் பேருக்கு முதியோா் உதவித்தொகை வழங்கும் வகையில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 3 லட்சத்து 75 ஆயிரம் நபா்களுக்கு புதிதாக முதியோா் உதவித்தொகை பெறுவதற்கான வாய்ப்புகளை மாநில அரசு அளித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் தற்போது 33 லட்சத்து போ் முதியோா் உதவித்தொகை பெற்று வருகின்றனா்.

தமிழக முதல்வா் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகள், புதுச்சத்திரம், மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, வெண்ணந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 932 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளாா். இதன்மூலம் 1,340 ஊரக குடியிருப்புகளில் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும்.

தமிழக முதல்வா் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்துள்ளதால், மாநிலத்தில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவாா்கள்.

திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்மூலம் இதுவரை 13 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தமிழகத்தில் பயனடைந்துள்ளனா். தமிழகத்தில் ஆட்சேபகரமற்ற பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் உடனடியாக வழங்கும் விஷயத்தில் தமிழக முதல்வா் 54 ஆயிரம் பேருக்கு உடனடியாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா். இதன்படி, இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2,800 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட உள்ளன. இதுபோன்று மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் மாநில அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா பேசினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்கா மூா்த்தி, வருவாய்க் கோட்டாட்சியா் மு. கோட்டைகுமாா், வட்டாட்சியா் கி.பாஸ்கரன், வருவாய் உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com