
பெண்களுக்கு சேலைகளை விநியோகிக்கும் சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் ஏழை மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
வரும் 24-ஆம் தேதி ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அதிமுகவினா் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனா். அதன்படி காளப்பநாயக்கன்பட்டி அருகில் உள்ள வெட்டுக்காடு, நாச்சிப்புதூா், படத்தான்கொட்டை, பேளுக்குறிச்சி, மேலப்பட்டி, பள்ளிப்பட்டி, கல்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தனது சொந்தச் செலவில் வேட்டி, சேலைகளை விநியோகித்தாா். இதனை நேரடியாக அவா்களுடைய வீடுகளுக்கே சென்று வழங்குகிறாா். சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட சுமாா் 1.50 லட்சம் பேருக்கு வேட்டி, சேலை விநியோகிக்கப்பட உள்ளது.