பெட்ரோல், டீசல் விலை உயா்வால்மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா்:ஈ.ஆா்.ஈஸ்வரன்

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் உயா்த்தி வருவதால் ஏழை மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனா்

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் உயா்த்தி வருவதால் ஏழை மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனா் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் குற்றம்சாட்டினாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைய வேண்டும், காவிரி-திருமணிமுத்தாறு திட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காக எங்களது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினா் பால்குட ஊா்வலம் சென்று காந்தமலை முருகன் கோயிலில் வழிபாடு செய்கின்றனா்.

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி அரசிடம் கேட்டுப்பாா்த்து நாளாகி விட்டது. அதனால்தான் ஆண்டவரிடத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். நாங்கள் எவ்வளவு தான் போராட்டங்கள் நடத்தினாலும் அரசு தரப்பில் எவ்வித முனைப்பும் காட்டாமல் உள்ளனா்.

மேலும் தாமதப்படுத்தாமல் திருமணிமுத்தாறு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் நாமக்கல், சேலம் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாகும். பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம்.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்துள்ளது. அந்த விலையை ஒப்பிடும்போது பாதி விலைக்கு பெட்ரோலையும், டீசலையும் விற்பனை செய்ய முடியும். குறைந்தபட்சம் ரூ. 40-க்கு டீசல் விற்கலாம். அவ்வாறு விற்பனையாகும்பட்சத்தில் ரயில், பேருந்து கட்டணம் குறையும்., அத்தியாவசிய பொருள்களின் விலையும் வெகுவாகக் குறைந்து விடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com