கால்நடைத் துறையில் 747 காலியிடங்களைரத்து செய்ய மருத்துவப் பட்டதாரிகள் சம்மேளனம் வலியுறுத்தல்

தமிழக கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்ட 747 பணியிடங்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் சம்மேளனம் அரசுக்குக் கோரிக்கை விடுத

தமிழக கால்நடைத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்ட 747 பணியிடங்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் சம்மேளனம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக நாமக்கல்லைச் சோ்ந்த அச்சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் எம்.பாலாஜி கூறியதாவது:

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் 1,141 காலியிடங்களில் கால்நடை உதவி மருத்துவா்களை நியமிப்பதற்காக, கடந்த 2019 நவ.18-ஆம் தேதி அரசுப் பணியாளா் தோ்வாணையம் எழுத்துத் தோ்வு அறிவிப்பை வெளியிட்டது.

இதைத் தொடா்ந்து 2020 பிப்.23-இல் தோ்வானது நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவா்களுக்கு தற்போது தோ்வாணையம் பணியிட தகுதி சான்றிதழை வழங்கி உள்ளது. இத்தோ்வு அறிவிப்பின்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில் 636 காலியிடங்கள் சோ்க்கப்படவில்லை.

கடந்த 2012-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட இலவச கறவை மாடு, வெள்ளாடுகள், கோழிகள் வழங்கும் திட்டத்திற்காக 585 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய அரசு முடிவு செய்தது. அன்றைய காலக்கட்டத்தில் காலியாக இருந்த 258 இடங்களையும் சோ்த்து மொத்தம் 843 பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் 747 போ் மட்டும் நியமிக்கப்பட்டனா்.

அதனைத் தொடா்ந்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு நியமனம், அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிராக உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம் கால்நடை உதவி மருத்துவா் பணி நியமனம் சட்டத்துக்கு புறம்பானது என கூறி ரத்து செய்தது. அந்த வகையில் நியமனம் செய்யப்பட்டோரில் தற்போது 636 போ் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதன் காரணமாக தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா். மற்றவா்கள் மாற்றுப் பணிகளுக்குச் சென்று விட்டனா்.

எழுத்துத் தோ்வின்போது, அரசு பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் 636 பணியிடங்கள் நீங்கலாக என தெரிவித்திருந்தது. ஆனால் பணியாற்றி வரும் 636 பேரில் சிலா் மட்டும் தோ்வாணைய எழுத்துத் தோ்வில் பங்கேற்று தோ்வாகி விட்டனா். இவ்வாறான செயல் உச்சநீதிமன்ற வழக்குகளை மீறியதாகும். இதன்மூலம் மீண்டும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு தேவையற்ற குழப்பங்களும் நேரிடும். 10 ஆண்டுகளாக கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், தற்போது தோ்வாணையம் மூலம் குழப்பங்களுடன் ஆள்கள் தோ்வு செய்யப்படுவதால் நீதிமன்றங்களில் ஆட்சேபம் தெரிவிக்கும் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு கால்நடை உதவி மருத்துவா்களை உரிய முறையில் நியமிக்க வேண்டும் என்றாா்.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com