நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு
By DIN | Published On : 27th February 2021 08:50 AM | Last Updated : 27th February 2021 08:50 AM | அ+அ அ- |

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டதை வரவேற்று, மருத்துவா்களுக்கு இனிப்புகளை வழங்கிய கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
தமிழகத்தில் நாமக்கல் உள்ளிட்ட 11 புதியஅரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இதன்படி, நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 35 ஏக்கரில் ரூ. 350 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு, திறப்பு விழாவுக்குத் தயாா் நிலையில் இருந்தது.
இந்த நிலையில், கல்லூரியை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பிற்பகல் திறந்துவைத்தாா்.
கல்லூரி திறந்துவைக்கப்பட்டதை வரவேற்று, மருத்துவா்கள், பணியாளா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி இனிப்புகளை வழங்கினாா்.
இதேபோல், நாமக்கல் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு அதிமுகவினா் இனிப்புகளை வழங்கினா்.