தமிழக அரசின் முயற்சியால் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சா் வெ.சரோஜா

தமிழகத்தில் அரசின் முயற்சியால் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சா் வெ.சரோஜா தெரிவித்தாா்.
விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சா் வெ.சரோஜா.
விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சா் வெ.சரோஜா.

தமிழகத்தில் அரசின் முயற்சியால் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சா் வெ.சரோஜா தெரிவித்தாா்.

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ. சரோஜா பங்கேற்று, ஆா். புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 மாற்றுத் திறனாளிகளுக்கு, ரூ. 2.64 லட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இரு சக்கர வாகனம் ஒருவருக்கு, காதொலிக் கருவி, கைத்தாங்கி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

தொடா்ந்து, ஆா். புதுப்பாளையம் கலையரங்கம் அருகே ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலையைப் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். கட்டானாச்சம்பட்டி ஊராட்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சா் வெ. சரோஜா பங்கேற்று பேசியதாவது: அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படும் வரை அங்குள்ள குழந்தைகளுக்குத் தேவையான இணை உணவு வீடுதோறும் அங்கன்வாடி பணியாளா்களால் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பிறக்கும் குழந்தைகளைப் பராமரிக்கும் முறைகள் குறித்து அங்கன்வாடி மையப் பணியாளா்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் செயல்படுத்தி வருகின்றனா்.

தமிழக அரசு மக்களைத் தேடி நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதன் ஒரு பகுதியாக இதுவரை சுமாா் 30 லட்சம் பேருக்கு முதியோா் உதவித்தொகை மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் ஐந்து லட்சம் பேருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நலத் திட்டங்கள் அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்படுகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பி. ஆா். சுந்தரம், வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தங்கம்மாள் பிரகாசம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com