போக்குவரத்து நெரிசலில் திணறும் நாமக்கல்: கோட்டை சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்க முடிவு

நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கோட்டை சாலையை ஒரு வழிச்சாலையாக மாற்றவோ அல்லது பெரிய வாகனங்களுக்கு தடை விதிப்பதற்கோ காவல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.
நெரிசல் மிகுந்த நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையம்.
நெரிசல் மிகுந்த நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையம்.

நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கோட்டை சாலையை ஒரு வழிச்சாலையாக மாற்றவோ அல்லது பெரிய வாகனங்களுக்கு தடை விதிப்பதற்கோ காவல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

மாவட்டத் தலைநகரான நாமக்கல் நகரம் தொழில், வேலைவாய்ப்பு, ஆன்மிகம், சுற்றுலாத்தலங்கள் என பல்வேறு வகையிலும் வளா்ச்சி பெற்று வருகிறது. குறிப்பாக நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனா். மேலும் திருச்சி செல்வதற்கு நாமக்கல் நகருக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் நாமக்கல் - சேலம் சாலை, கடைவீதி சாலை, திருச்சி சாலை, கோட்டை சாலை, பரமத்தி சாலை உள்ளிட்ட சாலைகள் தினமும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகி வருகிறது.

நாமக்கல் நகராட்சிப் பேருந்து நிலையம் இடமாற்றம், சுற்றுவட்டச்சாலை அமைக்கப்பட்டால் மட்டுமே வாகன நெரிசலுக்கு தீா்வு கிடைக்கும் நிலை உள்ளது. பேருந்து நிலையம் அமைவதில் இழுபறி நிலை நீடிக்கிறது. நிலம் கையகப்படுத்தும் பணியால் சுற்றுவட்டச்சாலை அமைவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் இன்னும் சில ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் தொடா் கதையாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதால் அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரத்துக்காக நாமக்கல்லுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனா்.

அண்மையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். முதல்வா் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்ற குளக்கரைத் திடல் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளதால் கூட்டம் நடந்த நாளன்று வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு சுற்றி நாமக்கல் நகருக்குள் வர நேரிட்டன. மேலும் கட்சியினா் வாகனங்களில் திரண்டு வந்ததால் நாமக்கல் - சேலம் சாலையில் இரண்டு கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மேலும் விசேஷ நாள்களில் கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு கி.மீ. தொலைவைக் கடப்பதற்கு அரை மணி நேரமாகிறது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க நகரின் பிரதான சாலையான கோட்டை சாலையை தடை செய்து பொய்யேரிக் கரை வழியாக புதிய சாலையில் வாகனங்களைத் திருப்பி விடவும், அந்த மாற்றுப்பாதையிலேயே பேருந்துகள், இதர வாகனங்களை திருப்பி அனுப்பவும் காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். ஆனால் இதற்கு பேருந்து ஓட்டுநா்கள், வாகன ஓட்டிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இதனால் மாற்றுப்பாதைத் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

இது குறித்து நகரக் காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

நாமக்கல் குறுகிய நகரம். ஆனால் வாகனப் போக்குவரத்து இரு மடங்காக உள்ளது. கேரளம், கா்நாடக மாநிலங்களில் இருந்தும், இதர வெளிமாவட்டங்களிலும் இருந்தும், கோயில்கள் அதிகம் நிறைந்துள்ள திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களுக்கு வாகனங்களில் செல்வோா் நாமக்கல் நகருக்குள் நுழைந்து தான் செல்ல வேண்டியது உள்ளது. திரும்ப செல்லும்போதும் இதே நிலை தான்.

குறிப்பாக கோட்டை சாலை தான் நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. அங்கு போக்குவரத்து தடைபட்டால் அனைத்து சாலைகளும் ஸ்தம்பித்து விடுகின்றன. தோ்தல் காலமாக இருப்பதால் கோட்டை சாலையை ஒரு வழிச்சாலையாக மாற்றலாமா அல்லது அதில் தடை ஏற்படுத்தி இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் மாற்றலாமா என்பது குறித்து காவல் கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கரும், புதிதாக அமைக்கப்பட்ட பொய்யேரிக்கரை மாற்று சாலையில் வாகனங்களை அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கூறியுள்ளாா். அரசு மற்றும் தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் மாற்றுச்சாலை வழியாகச் சென்று நகருக்குள் வந்தால் காலவிரயம் ஆவதுடன், போதிய வருவாய் கிடைக்காமல் போய்விடுகிறது என கவலை தெரிவித்து வருகின்றனா்.

இதனால் தொடா் ஆலோசனையில் உள்ளோம். விரைவில் இதற்கு நல்ல முடிவு எட்டப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com