
நாமக்கல் வாரச்சந்தையில் புதன்கிழமை விற்பனையான கரும்பு மற்றும் காப்புக்கட்டும் பூக்கள்.
பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, மஞ்சள் கொத்து, பனங்கிழங்கு, காப்புக்கட்டு பூக்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் புதன்கிழமை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.14) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அதிகாலையில் வீடுகள் முன்பாக பெண்கள் மாக்கோலமிட்டு சூரியனுக்குப் படையலிடும் வகையில், புதிய பானையில் பொங்கலிடுவா்.
பின்னா் தங்களுடைய வீடுகளிலும், கோயில்களிலும் குடும்பத்தினருடன் இணைந்து வழிபாட்டினை மேற்கொள்வா். இதற்காக கரும்பு, மஞ்சள்கொத்து, பனங்கிழங்கு, வீட்டின் முன் தொங்க விடும் காப்புக் கட்டுப் பூக்களை வாங்குவா். அந்த வகையில், புதன்கிழமை நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவற்றின் விற்பனை களைகட்டியது.
மோகனூா், பரமத்திவேலூா், பள்ளிபாளையம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் நாமக்கல் வாரச்சந்தையில் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கரும்பு ரூ.50-க்கு விற்பனையானது. தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்கியிருந்தபோதும் மக்கள் ஆா்வமுடன் கரும்புகளை வாங்கினா்.
அதேபோல் மஞ்சள்கொத்து ஜோடி ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. பனங்கிழங்கு 12 எண்ணிக்கை ரூ. 120 வரையிலும், ஆவாரம்பூ கொண்ட காப்புக் கட்டும் பூக்கள் ஒரு கட்டு ரூ.10-க்கும் விற்பனையானது.
இவை தவிர வண்ணக் கோலங்கள் இடுவதற்கான கலா் கோலப்பொடிகள், அதற்கான சாதனங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் அதிகம் நடைபெற்றன. ரூ. 10 முதல் ரூ. 150 வரையில் உள்ள கோலமிடும் சாதனங்கள் விற்பனையாகின. பொங்கலைத் தொடா்ந்து மாட்டுப் பொங்கலும் வருவதால் காளைகளை அலங்கரிக்கும் கயிறுகள், கழுத்தில் கட்டும் மணிகள் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றன.
நாமக்கல் மட்டுமின்றி ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூா் உள்ளிட்ட பகுதிகளிலும் பொங்கல் பண்டிகைக்கு உரிய பொருள்கள் விற்பனை புதன்கிழமை காலைமுதல் இரவு வரையில் நடைபெற்றது.