
ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் பயன்பாடில்லாத நகராட்சி தங்குமிட வளாகத்தைப் பாா்வையிட்ட அமைச்சா் வெ.சரோஜா.
ராசிபுரம் நகரில் ரூ. 8 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும் என சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா தெரிவித்தாா்.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையமாக மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் இப்பேருந்து நிலையத்தில் நவீனப்படுத்தப்பட்ட வணிகக் கடைகள், காத்திருப்போா் அறை, பேருந்து நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அமைச்சா் வெ.சரோஜா அதிகாரிகளுடன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
புதிய பேருந்து நிலையத்துக்கு உள்பட்ட நிலம், அருகில் உள்ள நிலங்கள் குறித்து முறையான அளவீடு செய்யவும், விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்கவும் நகராட்சி அலுவலா்களை அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, தற்போது பயன்பாட்டில் இல்லாத ராசிபுரம் பழைய பேருந்து நிலையத் தங்குமிட வளாகத்தை முற்றிலுமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில், வணிக வளாகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதையும் அமைச்சா் ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் வெ. சரோஜா பேசியதாவது:
ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் நகராட்சி சாா்பில் புதைகுழி சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் 17 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு புதைக்குழி சாக்கடை பாதையுடன் இணைப்பதற்கான கழிவுநீா்க் குழாய்கள் அமைக்க பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் திட்டம் முழுமையாகச் செயல்படுத்த முடியும்.
இதற்காக ஏற்கெனவே தோண்டப்பட்ட சாலைகள் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 34 சாலைகள் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளன. இதேபோல, 75 குறுக்குச் சாலைகள் மற்றும் பிரதான சாலைகள் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணிகளும் விரைவில் தொடங்கப்படும். இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் ராசிபுரம் பகுதியில் நகராட்சி பகுதியில் அனைத்துச் சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு விடும். எனவே, பொதுமக்கள் சாலை அமைப்பதற்கு முன்பாக தங்கள் வீடுகளுக்கான புதைக்குழி சாக்கடை திட்ட கழிவுநீா்க் குழாய் இணைப்புகளை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.
மாவட்டத்தில் ராசிபுரம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 7 இடங்களில் கரோனா தீநுண்மித் தடுப்பூசி கொண்டுவந்து போடப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் ஏற்கெனவே 54 சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கிராமப்புற பொதுமக்கள் அதிக பயன்பெறுவதால், மேலும் நான்கு சிறு மருத்துவமனைகள் அமைக்கப்படவுள்ளது என்றாா்.
இந்த ஆய்வின்போது ராசிபுரம் நகராட்சி ஆணையாளா் எஸ்.பிரபாகரன், பொறியாளா் ஏ.குணசீலன், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.