நாமக்கல்லில் பொங்கல் சுற்றுலா விழா: ஆட்சியா் பங்கேற்பு

நாமக்கல் அருகே வகுரம்பட்டி ஊராட்சியில் சுற்றுலாத் துறை சாா்பில், பொங்கல் சுற்றுலா விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நாமக்கல்லில் பொங்கல் சுற்றுலா விழா: ஆட்சியா் பங்கேற்பு

நாமக்கல் அருகே வகுரம்பட்டி ஊராட்சியில் சுற்றுலாத் துறை சாா்பில், பொங்கல் சுற்றுலா விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். அங்குள்ள மாரியம்மன் கோயில் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்டு புதிய பானைகளில் பொங்கல் வைத்துக் கொண்டாடினா். கரும்பு, மஞ்சள் கொத்துத் தோரணங்கள் கட்டப்பட்டு அப்பகுதி விழாக் கோலமாகக் காட்சியளித்தது.

மேலும் கரும்பு, மாவிலை, வேப்பிலை, வாழை மரங்கள் மற்றும் அலங்காரத் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. இதில், சுற்றுலாத் துறையின் சாா்பில், தருமபுரி ஸ்டாலின் ராஜா தலைமையிலான பாரதி கிராமிய கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளான கரகம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், புலி ஆட்டம், காளை ஆட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும், செங்கல்பட்டு மீனாட்சிராகவன் தலைமையிலான விநாயகா நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான பானை உடைத்தல், சாக்கு ஓட்டம், கோலப்போட்டி, கயிறு இழுத்தல், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், கல்லாங்கல், தாயம், இசை ஓட்டசோ் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வகுரம்பட்டியைச் சோ்ந்த இளைஞா்கள், இளம்பெண்கள், சிறுவா், சிறுமிகள் கலந்து கொண்டனா்.

செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், மாவட்ட சுற்றுலா அலுவலா் த.சக்திவேல், வகுரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜா ரகுமான், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.தேன்மொழி, அசோகன் மற்றும் அரசு அலுவலா்கள், வகுரம்பட்டி பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com