ராசிபுரம் அரசு கல்லூரியில் திருவள்ளுவா் தினவிழா
By DIN | Published On : 16th January 2021 07:19 AM | Last Updated : 16th January 2021 07:19 AM | அ+அ அ- |

திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கல்லூரி முதல்வா் சீ.மணிமேகலை.
திருவள்ளுவா் தினத்தையொட்டி ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்கத்தின் திருவள்ளுவா் அறக்கட்டளை சாா்பில் 32-ஆவது ஆண்டாக திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் சீ.மணிமேகலை தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவரும், முன்னாள் மாணவா் சங்க செயலாளருமான இரா.சிவக்குமாா் வரவேற்றாா். கல்லூரி முன்னாள் மாணவரும், அண்ணாமலை பல்கலைக்கழக துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவருமான பி.சக்திவேல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, திருக்கு, திருவள்ளுவா் குறித்து பேசினாா்.
விழாவில் அலங்கரிக்கப்பட்ட திருவள்ளுவா் சிலை, உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் முன்னாள் மாணவா் சங்க துணைத் தலைவரும், கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியருமான பெ.துரைசாமி, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் ஆ.முத்துக்குமாா், நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளின் ஆய்வாளா் கை.பெரியசாமி, வழக்குரைஞா் சக்திவேல், தலைமையாசிரியா் வெ.சந்திரசேகரன் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், என்.சி.சி மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.