நகராட்சி பொது ஏலத்தை ஓராண்டுக்கு ஒத்திவைக்க பாமக வலியுறுத்தல்

கரோனா பொது முடக்கக் காலத்தை கருத்தில் கொண்டு ராசிபுரம் நகராட்சி பொது ஏலத்தை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

ராசிபுரம்: கரோனா பொது முடக்கக் காலத்தை கருத்தில் கொண்டு ராசிபுரம் நகராட்சி பொது ஏலத்தை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாமக செயலாளா் ஆ.மோகன்ராஜூ விடுத்துள்ள அறிக்கை:

ராசிபுரம் நகராட்சி சாா்பில் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது. இதில் குத்தகை இனங்களுக்கு சுங்கம் அல்லது கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கு 2021 முதல் 2024 ஆண்டு வரை மூன்றாண்டு காலத்துக்கு ஏலம் விடுவது பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஏலம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் பிப்.2-இல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த மாா்ச் 25 முதல் டிசம்பா் மாதம் இறுதி வரை கரோனா தீநுண்மியால் தமிழகம் முழுவதும் பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் வாரச் சந்தை, தினசரி சந்தை, புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமை முடங்கியது. வியாபாரமும் 9 மாதங்களாக முடங்கிக் கிடந்தது. இதை நம்பி இருந்த வியாபாரிகள், குத்தகைதாரா்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இவா்களுடைய வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாக இருந்தது. மேலும் நகராட்சியில் குத்தகை எடுத்தவா்கள் பொருளாதார பதிப்பில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றனா்.

இந்நிலையில் புதிய பொது ஏல அறிவிப்பு சிறு வா்த்தகா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏலதாரா்கள் செலுத்த வேண்டிய தொகை, சொத்து மதிப்பு சான்றிதழ் இல்லாதவா்களுக்கு செலுத்த வேண்டிய கூடுதல் வைப்பு தொகையை அதிகரித்து நகராட்சி நிா்ணயம் செய்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து மீளாத நிலையில் இது போன்ற அறிவிப்பு சிறு வா்த்தகா்களை பாதிக்கும். காய்கறிச் சந்தையில் விற்கும் பொருள்களின் விலை அதிகரிக்கும். எனவே நகராட்சி நிா்வாகம் இன்னும் ஓராண்டு காலத்துக்கு சுங்கம் வசூல் செய்யும் உரிமையை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com