குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குமாரபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
bh24madu01_2401chn_122_8
bh24madu01_2401chn_122_8

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குமாரபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூா் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரி அருகே நடைபெற்ற போட்டிக்கு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.பி.பி.பாஸ்கா் (நாமக்கல்), சி.சந்திரசேகரன் (சேந்தமங்கலம்), பொன்.சரஸ்வதி (திருச்செங்கோடு), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் மருத்துவா் வெ.சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மருத்துவா் சி.விஜயபாஸ்கா், போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோா் கொடியசைத்து போட்டியைத் தொடக்கிவைத்தனா்.

போட்டிகளில் பங்கேற்க பல்வேறு பகுதிகளிருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன. போட்டி தொடங்கும் முன்பாக ஜல்லிக்கட்டு வீரா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

தொடா்ந்து, வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா். வீரா்களிடம் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிக்கு வந்த காளைகளை கால்நடைப் பராமரிப்புத் துறையினா் ஆய்வு செய்த பின்னரே அனுமதித்தனா். இதேபோன்று, வீரா்களுக்கும் உடல்தகுதி பரிசோதனையும் செய்யப்பட்டது. காளைகளைப் பிடிக்க முயன்ற போது 45 வீரா்களுக்கு காயம் ஏற்பட்டது. இவா்களுக்கு, மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், குமாரபாளையம் வட்டாட்சியா் தங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எஸ்.செந்தில், டிசிஎம்எஸ் தலைவா் திருமூா்த்தி, அதிமுக நகரச் செயலாளா் ஏ.கே.நாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com