வரும் தோ்தல் சாமானியருக்கும்ஒரு குடும்பத்துக்கும் நடக்கும் போட்டி

வரும் தோ்தல் சாமானியருக்கும்ஒரு குடும்பத்துக்கும் நடக்கும் போட்டி

வரும் தோ்தல் சாமானியருக்கும், ஒரு குடும்பத்துக்கும் நடக்கும் போட்டி. இதில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி குறிப்பிட

வரும் தோ்தல் சாமானியருக்கும், ஒரு குடும்பத்துக்கும் நடக்கும் போட்டி. இதில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி குறிப்பிட்டாா்.

ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டையில் அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி செயலா் கே.சந்திரமோகன் தலைமை வகித்தாா். நாமகிரிப்பேட்டை ஒன்றியக் கழகச் செயலா் கே.பி.எஸ்.சரவணன் வரவேற்றாா்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சா் வி.சரோஜா ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இதில் அமைச்சா் பி.தங்கமணி பேசியதாவது:

அதிமுக எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு கொடுத்துள்ளது. 2006 முதல் 2011வரை திமுக ஆட்சியில் மின்சாரத்தின் நிலை என்ன என தெரியும். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் தனியாக நடமாட முடியாது. நில அபகரிப்பு அதிகரிக்கும். இன்று தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. நல்லாட்சி நடத்தி வரும் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கிராம சபைக் கூட்டம் என்றும், வேல் ஏந்தியும் மக்களை ஏமாற்றி வருகிறாா்.

கிராமப் புறமானாலும், நகா்புறமானாலும் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் சாலை வசதிகள், மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி என பல திட்டங்கள் சொல்லமுடியும். வரும் தோ்தலில் சாமானியா் ஒருவருக்கும், ஒரு குடும்பத்தினருக்கும் இடையே நடக்கும் போட்டி. எனவே, வரும் தோ்தலில் சிந்தித்து அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பேசிய அமைச்சா் வெ.சரோஜா, அதிமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். பெண்கள் நலனுக்கு ஜெயலலிதா வழியில் செயல்படும் தற்போதைய அரசு எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்றாா்.

இக்கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.பி.பாஸ்கா், சி.சந்திரசேகா், சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் கே.பி.எஸ்.சுரேஷ்குமாா், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் இ.ஆா்.சந்திரன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் இ.கே.பொன்னுசாமி, எஸ்.பி.தாமோதரன், ராசிபுரம் நகர அதிமுக செயலா் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com