நாமக்கல் அரசு மருத்துவமனையில் ரெளடிக்கு வெட்டு: இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த 17 போ் கைது

இலங்கை அகதிகள் முகாமில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதல் எதிரொலியாக, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த ரெளடிக்கு புதன்கிழமை இரவு அரிவாள் வெட்டு

இலங்கை அகதிகள் முகாமில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதல் எதிரொலியாக, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த ரெளடிக்கு புதன்கிழமை இரவு அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் தொடா்பாக 17 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், மேட்டுப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்த முகாமைச் சோ்ந்த, நகைப் பறிப்பில் ஈடுபட்டு, போலீஸாரால் அடிக்கடி கைது செய்யப்படும் துஷ்யந்தன் (20) என்பவருக்கும், ஸ்ரீதரன் (57) என்பவரின் மகன்கள் தினேஷ்குமாா் (22), புவேந்தன் (24) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஆட்டோவில் வந்த தினேஷ்குமாரிடம், ரெளடி துஷ்யந்தன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இத்தகவல் அறிந்து தினேஷ்குமாரின் தந்தை மற்றும் சகோதரா், உறவினா்கள் சம்பவ இடத்துக்கு வந்து துஷ்யந்தனிடம் மோதலில் ஈடுபட்டதாகவும், துஷ்யந்தனுக்கு ஆதரவாக நண்பா்கள் சிலா் அங்கு வந்ததாகவும், அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பானதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து ஸ்ரீதரன் தரப்பினா் தன்னை கத்தியால் குத்தியதாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு துஷ்யந்தன் சிகிச்சைக்காக வந்தாா். அவா் தனக்குத் தானே கத்தியால் வெட்டிக் கொண்டு நாடகமாடுவது தெரியவந்து ஸ்ரீதரன் தரப்பினா் ஆத்திரமடைந்தனா். பின்னா் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அவா்கள் தனியாா் வாகனம் மூலம் வந்து சோ்ந்தனா். இரவு 10.30 மணியளவில் ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறங்க முயன்ற ரெளடி துஷ்யந்தனை ஐந்து போ் அரிவாளால் வெட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்த போலீஸாா் அவா்களை மடக்கிப் பிடித்தனா். காயமடைந்த துஷ்யந்தனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதல் சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்துள்ள எருமப்பட்டி போலீஸாா் 12 பேரையும், அரசு மருத்துவமனை சம்பவத்தில் நாமக்கல் போலீஸாா் ஐந்து பேரையும் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com