பரமத்தி அருகே அனுமதியின்றி வெள்ளைக்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
By DIN | Published On : 01st July 2021 11:40 PM | Last Updated : 01st July 2021 11:40 PM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் பகுதிக்கு கரூா் மாவட்டப் பகுதியில் இருந்து அனுமதியின்றி வெள்ளைக்கல் ஏற்றி வந்த லாரியை நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கத்துறையினரும் பரமத்தி போலீஸாரும் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கரூா் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் பகுதிக்கு சிலா் அனுமதியின்றி லாரியில் வெள்ளைக்கல் ஏற்றி வருவதாக நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கத் துறையினருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனா் பூா்ணவேல் மற்றும் பரமத்தி போலீஸாா் பரமத்தி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். சோதனையில் கரூா் மாவட்டம் வெள்ளியணையில் இருந்து பரமத்தி அருகே பில்லூரில் உள்ள கல் அரைக்கும் ஆலைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அனுமதியின்றி வெள்ளைக்கல் ஏற்றி வந்த லாரியை நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கத் துறையினா் பறிமுதல் செய்து திண்டுக்கல் மாவட்டம்,ரெட்டியாா் சத்திரம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சுப்பிரமணியை (38) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.