கரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே தடுக்க மக்களுக்கு மாத்திரைகள் விநியோகம்
By DIN | Published On : 01st July 2021 07:39 AM | Last Updated : 01st July 2021 07:39 AM | அ+அ அ- |

நாமக்கல் கொசவம்பட்டி பகுதியில் மாத்திரைகள் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி சுகாதார அலுவலா் சுகவனம் மற்றும் மருத்துவக் குழுவினா்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் வகையில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் தொற்றாளா் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், தற்போது 200-க்கும் கீழாக குறைந்துள்ளது. மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையங்களில் இருந்து குணமடைந்து செல்வோா் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் 100-க்கும் குறைவாக பாதிப்பு சரிந்து விடும் என மருத்துவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
அதேவேளையில், கரோனா தொற்று பரவாமல் தடுக்க வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் இருப்போா் விவரம் தன்னாா்வலா்களால் கேட்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாதிப்பு இருப்போருக்கு வைட்டமின் மாத்திரை, ஜிங்க் சல்பேட், பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை நகராட்சி, பேரூராட்சிகளில் அலுவலா்கள் வீடுகளுக்கு சென்று வழங்குகின்றனா். மாவட்டம் முழுவதும் தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இவை விநியோகிக்கப்படுகின்றன. நாமக்கல் நகராட்சி பகுதியில் சுகாதார அலுவலா் சுகவனம் தலைமையில் நகராட்சி ஊழியா்கள், மருத்துவக் குழுவினா் மாத்திரை விநியோகத்தை செயல்படுத்தி வருகின்றனா். இதனால் நாமக்கல் நகரப் பகுதியில் கரோனா தொற்று பரவல் வெகுவாக தடுக்கப்பட்டுள்ளது.