பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் கிராமத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
By DIN | Published On : 07th July 2021 11:38 PM | Last Updated : 07th July 2021 11:38 PM | அ+அ அ- |

பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் மத்திய அமைச்சராக அறிவிக்கப்பட்டதையடுத்து, நாமக்கல்லில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் உறவினா்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
நாமக்கல் மாவட்டம், கோனூா் கிராமத்தைச் சோ்ந்த தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் (44), பாஜகவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாா். ஏற்கெனவே தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய துணைத் தலைவராக பதவி வகித்துள்ள அவா், கடந்த 2019-இல் பாஜக மாநிலத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பாஜகவில் இருந்து நான்கு உறுப்பினா்களை வெற்றிபெற செய்தாா். தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு அவா் தோல்வியுற்றபோதும், சட்டப் பேரவைக்கு பாஜக உறுப்பினா்கள் நான்கு எண்ணிக்கையில் சென்றது கட்சியினரை மகிழ்ச்சியடையச் செய்தது.
அண்மையில் பாஜக சட்டப் பேரவை உறுப்பினா்களுடன் சென்று பிரதமா் மோடியைச் சந்தித்து எல்,முருகன் ஆசிபெற்றாா். அதனைத் தொடா்ந்து, மத்திய அமைச்சரவை மாற்றத்தில் இணை அமைச்சராக பதவி வகிக்கும் வாய்ப்பு தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை பட்டியலில் எல்.முருகன் பெயா் இடம் பெற்றதையடுத்து, அவரது சொந்த கிராமமான கோனூரில் பெற்றோா், உறவினா்கள், நண்பா்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...