கொல்லிமலை மலைப் பாதையில் மண் சரிவு: போக்குவரத்து நிறுத்தம்
By DIN | Published On : 09th July 2021 11:02 PM | Last Updated : 09th July 2021 11:02 PM | அ+அ அ- |

நாமக்கல், கொல்லிமலையில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் பலத்த மழையால் மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அவ் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொல்லிமலையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின. இதனால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், மலையில் உள்ள பிரசித்த பெற்ற ஆகாய கங்கை அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. கரோனா பரவல் காரணமாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மண் சரிவு: மழை காரணமாக கொல்லிமலை செல்லும் பாதையில் 30, 31, 32-ஆவது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. மண், கற்கள் பாதையில் குவிந்ததால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப் பகுதியில் சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி நேரில் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இந்திரம் பயன்படுத்தி மண் சரிவை சரிசெய்து போக்குவரத்து சீரமைத்தனா்.